Published : 10 Mar 2023 04:39 AM
Last Updated : 10 Mar 2023 04:39 AM

தமிழகத்தில் 29 சுங்கச் சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு - ஏப்ரல் 1 முதல் அமலாகும் என தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்.1-ம் தேதி 29 சுங்கச் சாவடிகளிலும், செப்.1-ம் தேதி மற்ற சுங்கச்சாவடிகளிலும் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் திட்ட அமலாக்கப் பிரிவு சார்பில் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது.

இது வரும் 25-ம் தேதிக்குள் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு ஏப்.1-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கார் மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு 5 சதவீதமும், கனரக வாகனங்களுக்கு 10 சதவீதமும் கட்டண உயர்வு அமலாகும் என தெரிகிறது. அவ்வாறு 29 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் பட்சத்தில் சென்னைக்கு அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் கார்கள் ஒருவழிப் பயணத்துக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

சென்னையில் இருந்து மதுரை, கோவை, போன்ற நகரங்களுக்கு செல்ல ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 40 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள பரனூர், வானகரம் உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x