Published : 10 Mar 2023 04:17 AM
Last Updated : 10 Mar 2023 04:17 AM

ஆளுநர்களுக்கு வாய் உண்டு; காதுகள் இல்லை - ‘உங்களில் ஒருவன்’ தொடர் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை: ஆளுநர்கள் அரசியலில் தலையிட கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பாஜக அரசின் ஆளுநர்கள் செவிமடுப்பார்களா என்ற கேள்விக்கு, ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

‘உங்களில் ஒருவன்’ தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்கள்:

கூட்டணி கட்சித் தலைவர்கள் குறித்து என்ன சொல்வீர்கள்?

‘தோள் கொடுப்பான் தோழன்’ என்பதன் அடையாளம் அவர்கள்.

கிராமப்புற பெற்றோர், மாணவ, மாணவிகளிடம் “நான் முதல்வன்” திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா?

நன்றாக ஏற்பட்டுள்ளது. 1,300 கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த திட்டத்தால் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தை எனது தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளேன்.

ஆளுநர்கள் அரசியலில் தலையிட கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பாஜக அரசின் ஆளுநர்கள் செவிமடுப்பார்களா?

இதுவரையிலான செயல்பாடுகளில் ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது.

டெல்லி துணை முதல்வர் கைது பற்றி?

எதிர்க்கட்சிகளை வெளிப்படையாகவே பாஜக மிரட்டுவதற்கு எடுத்துக்காட்டு இது. மணீஷ் சிசோடியா கைது கண்டிக்கத்தக்கது.

வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் குறித்து?

தேர்தல் வியூகங்கள் மூலமாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. திரிபுராவில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை திப்ரா மோத்தா பிரித்ததால் பாஜக வெற்றி பெற்றது. நாகலாந்தில் கூட்டணியமைத்து வெற்றி பெற்றுள்ளனர். மேகாலயாவில் பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் கட்சிக்கு தனது ஆதரவை வழங்கி, 2 தொகுதியை வென்ற பாஜக ஆளுங்கட்சியாக தன்னை காட்டிக் கொள்கிறது. இதுபோன்ற பிம்பங்களைக் கட்டமைத்து, தொடர்ந்து வெற்றி பெறுவதைப்போல காட்டிக் கொள்கிறார்கள்.

கீழடி அருங்காட்சியகம் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளதே?

அந்த அருங்காட்சியகம், காணொலி, தொடுதிரை, 3டி என உயர் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. உலகத் தமிழர் அனைவரும், தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது கீழடி சென்று பார்க்க வேண்டும்.

உலக மகளிர் தினத்தையொட்டி, மகளிருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

பெண்களுக்கு சொல்வதைவிட, ஆண்களுக்கு ஓர் அறிவுரை சொல்ல நினைக்கிறேன். பெண்களைக் குறித்த ஆண்களின் பார்வையில் மாற்றம் வேண்டும்.

வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக வெளியான பொய்யான செய்தி குறித்து?

வடமாநிலங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளே, இதை செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதுதான். பாஜகவுக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை நான் எடுத்துக்கூறிய மறுநாளே, இப்படிப்பட்ட பொய் பரப்பப்பட்டதை கவனித்தாலே சூழ்ச்சி புரியும். தமிழகமும், தமிழர்களும் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் விரும்புகிறவர்கள். இது இங்கிருக்கும் வடமாநில சகோதரர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து?

இந்தியாவை வளர்த்துள்ளோம் என்று பாஜக சொல்வது இதுதான். 2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது சிலிண்டர் விலை ரூ.414. தற்போது ரூ.1,118. ஒரு லிட்டர் பெட்ரோல் அப்போது ரூ.72.26; தற்பாது ரூ.102.63. டீசல் ரூ.55.49; தற்போது ரூ.94.24. பாஜக ஆட்சிக்கு வரும்போது மத்திய அரசின் கடன் ரூ.54 லட்சம் கோடி. தற்போது ரூ.147 லட்சம் கோடி. இதுதான் பாஜகவால் இந்தியா அடைந்த வளர்ச்சி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x