Published : 09 Mar 2023 11:54 PM
Last Updated : 09 Mar 2023 11:54 PM
மதுரை: 5 ஆண்டிற்கு முன் குறைந்தபட்ச ஊதிய அரசாணை நிர்ணயித்த தினசரி ஊதியம் ரூ.721 தற்போதுவரை தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்று மாநகராட்சி தொழிலாளர்கள் குறைந்தப்பட்ச ஊதியக்குழுவிடம் ஆட்சேபம் தெரிவித்தனர்.
மதுரை மாநகராட்சியில் தினக்கூலி, ஒப்பந்த பணியில் தூய்மைப்பணியாளர்கள், அபேட் மருந்து தெளிப்பு பணியார்கள், பாதாள சாக்கடைப் பணியாளர்கள், பிட்டர்கள், கழிவு நீரேற்று நிலையம் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள், காவலாளிகள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் தினக்கூலி பணியாளர்களுக்கு மாநகராட்சியும், ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனங்களும் ரூ.509 ஊதியம் வழங்குகிறார்கள். அபேட் மருந்து தெளிப்பு ஒப்பந்த பணியாளர்களுக்கு மட்டும் ரூ.350 மிக குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டிற்கு முன் மாநகராட்சியில் 725 பேர் தினக்கூலிப் பணியாளர்களாக இருந்தனர். தற்போது இறப்பு, அரசு வேலை கிடைத்தது, வாரிசு வேலை கிடைத்தது உள்ளிட்டவையில் வகைகளில் 50 பேர் சென்றுவிட்டனர். மீதம் 675 பேர் பணிபுரிகிறார்கள். ஒப்பந்தப் பணியாக தூய்மைப் பணியார்கள் 2,100 பேரும், மற்ற பணிகளில் 2,600 பேரும் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு உள்ளாட்சி நிறுவனங்களின் குறைந்தபட்ச ஊதிய குழு பரிந்துரைபேரில் தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தினசரி ஊதியமாக ரூ.721 வழங்க அரசாணை பிறப்பித்தது.
ஆனால், இந்த ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் 5 ஆண்டிற்கு பிறகு மீண்டும் தினக்கூலி தொழிலாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்வதற்காக நேற்று உள்ளாட்சி நிறுவனங்களின் குறைந்தபட்ச ஊதிய குழு மாநகராட்சி தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள், ஏற்கனவே 5 ஆண்டிற்கு முன் நிர்ணயித்த ஊதியத்தை மாநகராட்சியும் வழங்கவில்லை. ஒப்பந்த நிறுவனங்களும் வழங்கவில்லை. வெறும் கண்துதுடைப்பிற்காக இந்த கூட்டங்கள் நடத்தப்படுவதாக ஆட்சேபம் தெரிவித்தனர். அதற்கு அந்த குழுவினர், தங்கள் கருத்துகள் அனைத்தையும் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதியளித்தனர்.
இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற மாநகராட்சி தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ‘‘ஊதியம் உயர்வு பேச்சுவார்த்தையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்யும்போது தினக்கூலி, ஒப்பந்தப் பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் ரூ.800, பஞ்சப்படி சேர்த்து மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கூறினோம்.
தற்போதைய விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, போக்குவரத்து செலவு, பிள்ளைகளின் கல்வி, மருத்துவ செலவு ஆகியவற்றில் கருத்தில் கொண்டு இந்த ஊதியம் உயர்வை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். பொறியாளர் பிரிவில் பணிபுரியும் டிரைவர்களுக்கு ரூ.900, பஞ்சப்படி சேர்த்து ரூ.29 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT