Published : 09 Mar 2023 08:19 PM
Last Updated : 09 Mar 2023 08:19 PM
சென்னை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை இளைஞர் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி அவரது நண்பர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த சத்தி பாண்டி என்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்த கோவையைச் சேர்ந்த சஞ்சய் ராஜாவை, கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார், சரவணம்பட்டி பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது சஞ்சய் ராஜா அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டுள்ளார். அப்போது தற்காப்பு நடவடிக்கையாக ரேஸ்கோர்ஸ் போலீஸ் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், துப்பாக்கியால் சஞ்சய்ராஜாவின் காலில் சுட்டார். காயமடைந்த சஞ்சய்ராஜா போலீஸாரால் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் ராஜாவிற்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் மற்றும் நீதிபதி நிர்மல்குமார் அமர்வில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT