Published : 09 Mar 2023 08:10 PM
Last Updated : 09 Mar 2023 08:10 PM

வதந்தி கட்டுக்குள் வந்தாலும் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவு: திருப்பூரில் தமிழக டிஜிபி தகவல்

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடந்த தொழில்துறையினர் ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட போலீஸார். | படங்கள்: இரா.கார்த்திகேயன்.

திருப்பூர்: வதந்தி கட்டுக்குள் வந்தாலும், தொடர்ந்து கண்காணிக்க தொழில் துறையினருக்கும் போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, திருப்பூர் தொழில் துறையினர் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

வட மாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் தொழில் துறையினருடன் உடனான ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உட்பட பல்வேறு தொழில் துறையினர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியது: ''தமிழகத்தைப் பற்றி உண்மைக்கு புறம்பான நிகழ்வுகளால் ஏற்பட்ட பீதி, பயம், பதற்றம் தற்போது தணிந்துள்ளது. கடந்த 8 நாட்களாக தமிழகத்தின் அனைத்து மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் ராணுவம் போன்று அணியாக நின்று, இரவு பகலாக நின்று வதந்தியை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தமிழகத்தில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தெரியாமல் செய்துவிட்டதாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளனர். தவறான வதந்தி பதிவிட்டவர்கள் தங்களது பதிவை நீக்கி உள்ளனர்.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடந்த தொழில்துறையினர் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற தொழில் துறையினர் ஒரு பகுதியினர்.

திருப்பூரைப் பொறுத்தவரை 46 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்களை போலீஸார் நேரடியாக சந்தித்துள்ளனர். அதேபோல் 462 நிறுவனங்களை போலீஸார் நேரில் ஆய்வு செய்துள்ளனர். வதந்தியை தொடர்ந்து கண்காணிக்க காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு சிறிய பிரச்சினை என்றாலும் உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஆட்கள் நியமித்து, தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழிலாளிகள் மத்தியில் சொந்த ஊர்களில் இருந்து வந்த வீடியோவால், சிறிய அச்ச உணர்வு இருந்தது.

வடமாநிலங்களில் உள்ள பெற்றோர்களுக்கு, இங்கிருப்பவர்கள் தகவல் சொல்லி உள்ளனர். இது போன்ற வதந்திகளை தொழில்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கண்காணிப்பு அலுவலர் மற்றும் குழு உருவாக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் நோக்கம் தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. வதந்தி பரப்பியவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சேகரித்து வருகிறோம்'' என்றார்.

தொடர்ந்து திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்களை நேரில் சந்திக்க சென்றார். இதில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், டிஐஜி விஜயகுமார், மாநகரக் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x