Published : 09 Mar 2023 07:08 PM
Last Updated : 09 Mar 2023 07:08 PM
சிவகாசி: ''தமிழகத்தில் பணியாற்றும் பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்'' என்று இன்று சிவகாசிக்கு வருகை தந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரித்து ஜெய்ஸ்வால் கூறினார்.
தமிழகத்தில் பணியாற்றும் பிஹார் மாநிலத் தொழிலாளர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னை வந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி செய்தித் தொடர்பாளர் ரித்து ஜெய்ஸ்வால் இன்று சிவகாசியில் உள்ள பாலீபேக் மற்றும் பேப்பர் பிரிண்டிங் நிறுவனங்களி்ல பணியாற்றும் தொழிலாளர்களுடன் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ''தமிழகத்தில் உள்ள பிஹார் மாநில தொழிலாளர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக இங்கு வந்துள்ளேன். பிஹார் உள்ளிட்ட வடமாநில இளைஞர்கள் தாக்கப்படுவதாக சமூக வலையதளங்களில் வெளியான வீடியாக்கள் போலீயானவை என தமிழக காவல் துறை அறிக்கை அளித்துள்ளது. இந்த போலீயான வீடியோக்கள் தமிழகம் மற்றும் பிஹார் அரசியலை களங்கபடுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பாஜகவினர் அரசியல் செய்கின்றனர். இது ஒரு கசப்பான உண்மை என்றாலும் பிஹார் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் பாஜகவின் தந்திரங்களை புரிந்து கொண்டுள்ளனர். தமிழகம், பிஹாரில் பாஜகவிற்கு எதிர்காலம் இல்லை.
பிஹாரில் மகாத்பந்தன் அரசு அமைந்து சில மாதங்கள் ஆன நிலையில், அரசு மீது பழிபோட பாஜக முயற்சிக்கிறது. தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுகிறது. சிவகாசி பகுதியில் உள்ள நிறுவனங்களில் உரிய ஊதியம், போனஸ், விடுமுறை அனைத்தும் வழங்கப்படுகிறது. இங்கு அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தொழிலாளர்கள் கூறியுள்ளனர்'' என்று அவர் கூறினார். பாமக மாநில பொருளாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர் டேனியல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT