Published : 09 Mar 2023 06:53 PM
Last Updated : 09 Mar 2023 06:53 PM
சென்னை: வட சென்னையில் குத்துச் சண்டை, கபடி, சிலம்பம் மைதானங்களுடன் நவீன விளையாட்டு வளாகம் இன்னும் ஓர் ஆண்டில் பயன்பாட்டுக்கு வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022 ஏப்.21-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில், வடசென்னை பகுதி இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து விளையாட்டு வளாகம் அமைக்க சென்னை மாநகராட்சியால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி தண்டையார்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.9.70 கோடி மதிப்பீட்டில் சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் அமைக்க நிர்வாக அனுமதியும், இதற்கான செலவினம் ரூ.9.70 கோடியை மானியமாக வழங்கவும் அரசாணை வெளியிட்டது.
இந்நிலையல், இந்த விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி விரைவில் தொடங்க உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "வட சென்னை பகுதியில் முதல் முறையாக நவீன விளையாட்டு வளாகம் அமைக்கப்படவுள்ளது. இதில் குத்துச்சண்டை, கபடி, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தனி மைதானம் அமைக்கப்படவுள்ளது. 2 கபடி மைதானம், ஒரு சிலம்பம் மைதானம், 2 குத்துச்சண்டை மைதானங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதைத் தவிர்த்து இறகுப்பந்து, கூடைப்பந்து, ஓடுதளம், ஸ்கேட்டிங், கைப்பந்து, கிரிக்கெட் பயிற்சி வலை, ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம், பெண்களுக்கான உள்ளரங்க உடற்பயிற்சிக் கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டுக் கூடம், விளையாட்டுக் கருவிகள் மற்றும் இதர உள்ளரங்க விளையாட்டுகளுக்கான வசதிகளோடு இது அமைக்கப்படவுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் தற்போது கோரப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கிய பிறகு 12 மாதங்களில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று இது பயன்பாட்டுக்கு வரும்" என்று அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT