Published : 11 Sep 2017 10:05 AM
Last Updated : 11 Sep 2017 10:05 AM
ஆற்று மணலுக்கு மாற்று மணலான எம்-சாண்ட் (தயாரிக்கப்பட்ட ஜல்லி மணல்) பற்றி மக்கள் மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 1000 திரையரங்குகளில் விளம்பரப் படம் திரையிடப்படுகிறது.
எம்-சாண்ட் தயாரிப்பு முறை, அதைப் பயன்படுத்தும் வழிமுறைகள், முதல்வரின் வேண்டுகோள் உள்ளிட்ட தகவல்களுடன் 2 நிமிடங்கள் 11 விநாடிகள் இந்த விளம்பரப் படம் ஓடுகிறது.
ஆற்று மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானத் தொழில் முடக்கம், புதிய மணல் குவாரிகள் தொடங்குவதற்கு தாமதம், நீதிமன்ற வழக்குகளால் இருக்கின்ற மணல் குவாரிகளையும் செயல்படுத்த முடியாத நிலை போன்ற காரணங்களால் தமிழ்நாட்டில் போதிய அளவு மணல் கிடைக்கவில்லை என்று மக்களும், கட்டுமானத் தொழில் செய்வோரும், புதிதாக வீடு கட்டுபவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முதல்வர் வேண்டுகோள்
இந்நிலையில், ஆற்று மணலுக்கு மாற்று மணலான எம்-சாண்ட் பற்றி மக்கள் மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் கே.பழனிசாமி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “நிலத்தடி நீர்மட்டம் உயர வேண்டும். ஆற்று மணல் இருந்தால்தான் நீரை சேமிக்க முடியும். அதேநேரத்தில் இயற்கை வளமும் பாதுகாக்கப்படும். எனவே, கட்டுமானப் பணிகளுக்கு நொறுக்கப்பட்ட கல் மணல் (CS-SAND) பயன்படுத்த வேண்டும். இது, சந்தையில் எம்-சாண்ட் (M-SAND) என்று அழைக்கப்படுகிறது. எம்-சாண்டை அதிகம் பயன்படுத்தி, ஆற்று மணல் உபயோகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்” என்று முதல்வர் பழனி சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
2 நிமிடங்கள் 11 விநாடிகள்
எம்-சாண்ட் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அதுதொடர்பான கையேட்டை முதல்வர் பழனிசாமி அண்மையில் வெளியிட்டார். அதன் தொடர்ச்சி யாக பொதுப்பணித் துறை உதவியுடன் செய்தி மக்கள் தொடர்புத் துறை, விளம்பரப் படம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இப்படம் 2 நிமிடங்கள் 11 விநாடிகள் ஓடுகிறது.
இப்போது இந்த விளம்பரப் படம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1000 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. மக்கள் விழிப்புணர்வுக்கான படம் என்பதால் கண்டிப்பாக இதனைத் திரையிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
மேன்மேலும் வளரும்
“ஆற்று மணலுக்கு மாற்று மணல்” என்று தலைப்பிடப்பட்டுள்ள, இந்த விளம்பரப் படத்தில், கல் குவாரிகளில் இருந்து ஜல்லி எடுத்து வரப்பட்டு, நவீன இயந்திரங்கள் மூலம் நொறுக்கப்பட்டு, தரமான எம்-சாண்ட் தயாரிப்பது, அதனைப் பயன்படுத்தி வானுயர்ந்த கட்டிடங்கள் கட்டுவது போன்ற காட்சிகள் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
எம்-சாண்ட் பயன்படுத்த வேண் டும் என்ற முதல்வர் பழனிசாமியின் வேண்டுகோள், அகில இந்திய கட்டுமான வல்லுநர் சங்க உறுப்பினர்கள் 2,100 பேர் எம்-சாண்ட் பயன்படுத்துவது பற்றி சங்கத்தின் கவுரவ செயலாளர் எஸ்.ராமபிரபு எடுத்துரைக்கும் காட்சிகள் சிறப்பு.
எல்லாவற்றிற்கும் மேலாக சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கும், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கும் முழுவதுமாக தரமான எம்-சாண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். தமிழகத்தில் இதுபோன்ற புரட்சித் திட்டங்கள் தொடரும். தமிழகம் மேன்மேலும் வளரும் என்ற வாசகத்துடன் விளம்பரப் படம் முடிவடை கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT