Published : 09 Mar 2023 06:06 PM
Last Updated : 09 Mar 2023 06:06 PM
கடலூர்: என்எல்சி சுரங்க விரிவாக்க பணி துவக்கப்பட்டுள்ளது. இதனால் வளையமாதேவி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், எதிர்ப்பு தெரிவித்த பாமகவினர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிர்வாகம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல் வளையமாதேவி கீழ் வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதியில் நிலங்களை கையகப்படுத்திய பகுதியில் இன்று என்எல்சி நிர்வாகம் எல்லைப் பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கான பணியை துவக்கி ஈடுபட்டனர்.
இப்பணியை யாரும் தடுக்காத வகையில் கடலூர் எஸ்.பி ராஜாராம் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு அந்தந்த பகுயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், என்எல்சி இந்தியா நிர்வாகம் இயந்திரம் மூலம் மண் அணைகளை போடத் தொடங்கியதை அறிந்த பாமகவினர்கள் திரண்டு, மேல் வளையமாதேவி பேருந்து நிறுத்தம் அருகில் மாவட்ட செயலாளர்கள் வடக்குத்து ஜெகன், கார்த்திகேயன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸார் அவர்களை கைது செய்தனர். இதுபோல சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டு பகுதியில் பாமக மாவட்ட செயலாளர்கள் செல்வ மகேஷ், சண்முத்து கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்ய முயன்றனர். போலீஸார் அவர்களை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து வளையமாதேவி பகுதியில் விவசாயிகள் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமையில் பெண்கள் உட்பட 30 பேர் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
போலீஸார் அவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 80 பேரையும் போலீஸார் சேத்தியாத்தோப்பு தனியார் திருமணமண்டபத்தில் வைத்துள்ளனர். என்எல்சி நிர்வாகத்தின், எல்லைப் பகுதியில் தடுப்பணை பணியை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேல் வளையமாதேவி கீழ் வளையமாதேவி, கரிவெட்டி கிராமங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT