Published : 09 Mar 2023 05:42 PM
Last Updated : 09 Mar 2023 05:42 PM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் என பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன்பின் நாளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும் என கூறி கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பின்னர் சட்டப்பேரவை தலைவர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது. வரும் 13-ம் தேதி காலை 9.45 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து 14-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக பட்ஜெட் மீதான பொது விவாதமும், மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெறுகிறது. வருகின்ற 31-ம் தேதி வரை 14 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினர்களும் பேரவையில் விதிகளின்படி எப்படி நடக்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் நேரடியாக முதல்வர், அமைச்சர்களை கேட்கும் விதமாக இருக்கக் கூடாது. அதற்கு பேரவை அனுமதி அளிக்காது. அரசை கேட்கும் விதமாக கேள்விகள் இருக்க வேண்டும். கேள்விகளுக்கு முதல்வர், அமைச்சர்கள் பதிலளிக்கும்போது, கேள்வி கேட்ட சட்டப்பேரவை உறுப்பினர் தவிர, மற்ற உறுப்பினர்கள் எழுந்து நிற்கக் கூடாது. கேள்வி கேட்ட உறுப்பினர் பதில் பெற்ற பின்புதான் அடுத்த உறுப்பினர் பேரவைத் தலைவரின் அனுமதி பெற்று கேள்வி கேட்க வேண்டும்.
தினசரி நடைபெறுகின்ற கூட்டத்தொடரில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் அலுவல் நேரம் முழுவதும் பேரவையில் அமர வேண்டும் என்று அனைத்து துறை செயலர்களுக்கும், தலைமை செயலர் வழியாக சட்டப்பேரவை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவையில் பதாகைகள், தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி கிடைத்துவிடும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT