Published : 09 Mar 2023 05:19 PM
Last Updated : 09 Mar 2023 05:19 PM

எம் - சாண்ட் உற்பத்திக்கு தனிப்பட்ட குவாரி குத்தகை வழங்கப்படாது: தமிழக அரசு புதிய கொள்கையின் அம்சங்கள்

எம் சாண்ட கொள்கையை வெளியிட்ட முதல்வர்

சென்னை: தமிழகத்தில் எம் - சாண்ட் உற்பத்தி செய்ய தனிப்பட்ட குவாரி குத்தகைகள் வழங்கப்பட மாட்டாது என்று அரசின் புதிய கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயற்கை மணல் (M-Sand) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கட்டுமானப் பணிகளில் ஆற்று மணலுக்கு மாற்றாக சமீப காலமாக எம்.சேண்ட் உபயோகம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தரமற்ற எம்.சாண்டினை சந்தைகளில் விற்பனை செய்வதைத் தடுக்கவும், கண்காணித்திடவும் எம்.சாண்ட் தயாரிப்பு, தரம், விலை மற்றும் அவற்றைக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றை வரைமுறைப்படுத்த மாநில அளவில் கொள்கை ஒன்று தேவைப்படுகிறது.

தலைமுறைகளுக்கிடையேயான சம பங்கு கொள்கையினை உலக அளவில் ஏற்றுக் கொள்ளும் சூழலில் ஆறுகள், காடுகள், கனிமங்கள் மற்றும் பிற இயற்கை வளங்களை மனித இனத்தின் ஒரு தலைமுறைக்கு மட்டுமின்றி அடுத்தடுத்த தலைமுறைகளின் நலனுக்காக பாதுகாக்க வேண்டி செயற்கை மணல் (M-Sand) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கை 2023 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இன்றைய தேதியிலிருந்து இந்தக் கொள்கை நடைமுறைக்கு வருகிறது. இதன் சிறப்பு அம்சங்கள்:

  • ஆற்று மணலைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆற்றின் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுத்தல்.
  • ஆற்று மணலுக்கு மாற்று கட்டுமானப் பொருளாக, தரமான செயற்கை மணல் அல்லது அரவை மணலின் பயன்பாட்டை ஊக்குவித்தல்.
  • தமிழகத்தில் உள்ள செயற்கை மணல், அரவை மணல் உற்பத்தி தொழிற்சாலைகள் தொடர்புடைய சட்டங்களை முறையாக பின்பற்றச் செய்தல்.
  • உற்பத்தி தொழிற்சாலைகளின் ஒப்புதலுக்கான நடைமுறையை முறைப்படுத்துதல்.
  • கல் குவாரிகளை மட்டுமே நம்பியிருக்கும் மண் அரைக்கும்/உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை பெறுவதற்கு வழி வகை செய்தல்.
  • கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளை நேர்த்தியான முறையில் மறுசுழற்சி செய்வதை ஊக்குவித்தல்.
  • மாநிலத்தில் கழிவு அற்ற (Zero Waste) சுரங்கம் மற்றும் குவாரிகளை ஊக்குவித்தல்.
  • செயற்கை மணல், அரவை மணல் (M-Sand / Crushed Sand) உற்பத்தி செய்வதற்காக தனிப்பட்ட குவாரி குத்தகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.

அதிகமான அளவு மணல் எடுத்தல் மற்றும் இயற்கைத் வளங்களின் குறைபாடு ஆகியவற்றால் ஆற்றுமணலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய சுற்றுச்சூழல், நில பயன்பாட்டுச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அவசியம் எழுந்துள்ளது. எனவே, தமிழக அரசு, கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஆற்று மணலுக்கு மாற்றாக செயற்கை மணல், அரவை மணல் உற்பத்தியை அதிகரிக்க கருதுகிறது. மேலும், செயற்கை மணல், அரவை மணல் குவாரிச் செயல்பாட்டின் போது பயன்பாட்டிற்கு உதவாத கற்களிலிருந்தும் சிறிய அளவிலான கிரானைட் கற்களிலிருந்தும் தயாரிக்கப்படுவதால் குவாரிகளில் ஏற்படும் கழிவுகளின் அளவினை குறைப்பதற்கு பயன்படுகிறது.

கிரானைட் மற்றும் சாதாரணக்கல் குவாரிகளில் (Rough stone quarries) கிடைக்கும் சிறிய அளவிலான கற்கள் செயற்கை மணல், அரவை மணல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் குவாரி கழிவுகளே இல்லாத நிலையினை உருவாக்குவதே இக்கொள்கையின் குறிக்கோளாகும். மதிப்பு குறைந்த பயன்படாத பாறைக்கற்கள், கழிவுகளிலிருந்து, செயற்கை மணல், அரவை மணல் போன்ற உயர் மதிப்புப் பொருள் உருவாக்கப்படுகிறது.

அதே நேரத்தில் அதிக விலையுள்ள ஆற்று மணலுடன் ஒப்பிடும் போது பொதுமக்கள் செலவு குறைந்த தரமான கட்டுமானப் பொருளை பெறலாம். உற்பத்திக்கான தரம் முறையாக பயன்படும்பொழுது செயற்கை மணல், அரவை மணல் அதிக நெகிழ்வுத்தன்மையும், உறுதித்தன்மை, எடை மற்றும் குறைந்த ஊடுருவக்கூடிய தன்மையும் கொண்டுள்ளது. இந்த நன்மைகள் காரணமாக செயற்கை மணல், அரவை மணல் தற்போது கட்டுமானத் துறையில் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x