Published : 09 Mar 2023 04:56 PM
Last Updated : 09 Mar 2023 04:56 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள 4 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு பல் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, நந்தனம் அரசு மாதிரி மேனிலை பள்ளியில், புன்னகை - பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், நடமாடும் பல் மருத்துவ ஊர்தியில் அளிக்கப்படும் பல் சிகிச்சையை மேற் பார்வையிட்டு, “புகையிலை ஒழிப்பு” கையெழுத்து பிரச்சார பலகையில் கையெழுத்து இட்டு, மாணவர்களின் கல்விப் பொருட்கள், சிற்றேடுகள் மற்றும் குறுந்தகடுகளை வெளியிட்டார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “புன்னகை என்கின்ற புதிய திட்டத்தினை இப்பள்ளியில் தொடங்கி வைத்திருக்கிறோம். பள்ளிக் குழந்தைகளை பரிசோதித்து அவர்களுக்கு ஏற்படும் வாய்வழி நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தீர்வு காண்பதற்கும் இத்திட்டம் பயன்தரும். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் பயிலும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பல் பரிசோதனைகளை செய்து அதன்மூலம் அவர்களுக்கு வாயில் ஏற்படுகின்ற பொதுவான நோய்களான பல் சொத்தை, ஈறு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், அதை கண்டறிவதற்கும் இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
முதல்வர், துணை முதல்வராக இருந்த பொழுது, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் சீரிய ஏற்பாட்டில் இதுபோன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நமது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்தமாக மாணவ, மாணவியருக்கும் பல் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும் என்கின்ற கோரிக்கையினை முதல்வர் வாயிலாக இத்துறைக்கு வைத்துள்ள கோரிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.
இந்திய அளவில் 5 முதல் 15 வயது வரை குழந்தைகளுக்கு ஏறத்தாழ 50% முதல் 60% குழந்தைகளுக்கு பல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளது. எனவே இந்த நோய்களிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கும், அவர்களை காப்பதற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர்கள் இந்த நடமாடும் பல் மருத்துவ வாகனத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளிக்காக குறிப்பாக அரசுப் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்துகின்ற, மாநகராட்சி பள்ளிகள் அதேபோல் அரசு நிதியுதவி பெறுகின்ற பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்வார்கள்.
சென்னையில் பயிலும், 54,000 மாணவர்களுக்கு பரிசோதனைகள் முடிவுற்றவுடன் தேசிய நலவாழ்வு குழுமத்தின் நிதி பங்களிப்போடு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இருக்கின்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்படவிருக்கிறது. இப்படி தொடர்ந்து நடத்தப்படவிருப்பதால் தமிழகத்தில் உள்ள 4 லட்சம் குழந்தைகள் இதன் மூலம் பயன்பெற உள்ளார்கள்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT