Published : 09 Mar 2023 04:26 PM
Last Updated : 09 Mar 2023 04:26 PM

சுங்கச் சாவடியை மூடச் சென்ற எங்களை அரசு தடுப்பது ஏன்? - தி.மலையில் கே.பாலகிருஷ்ணன் காட்டம்

திருவண்ணாமலை அடுத்த தீபம் நகரில் இனாம்காரியந்தல் சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன். படம் - இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: “தமிழகத்தில் சுங்கச் சாவடி அமைத்து மக்களிடம் பாஜக அரசு கொள்ளையடிக்கிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

இனாம்காரியந்தல் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலை அடுத்த தீபம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே இன்று (9-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியது: "நாடு முழுவமும் தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டண வசூல் மையங்களை (சுங்கச்சாவடிகள்) உருவாக்கி, சாதாரண மக்களிடம் பிரதமர் மோடி அரசாங்கம் பகல் கொள்ளை அடிக்கிறது. திருவண்ணாமலை - வேலூர் சாலையானது இரு வழி சாலையாக உள்ளன. இரு வழி சாலையில் வசூல் மையம் அமைக்கக்கூடாது.

நான்கு வழி சாலையாக மாற்றாமல், இரு வழி சாலையில் வசூல் மையங்களை அமைத்து, திருவண்ணாமலையில் திருவிழா மற்றும் கிரி வலத்துக்கு வரக்கூடிய பக்தர்களிடம் கொள்ளை அடிப்பதற்காக வசூல் மையம் செயல்படுகிறது. இந்தியா முழுவதும் வசூல் மையங்களை நடத்தி கொண்டும், இதற்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கியும் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நித்தின் கட்கரி செயல்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் 32 இடங்களில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள வசூல் மையங்களை அகற்ற வேண்டும் நித்தின் கட்கரியிடம் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தி உள்ளார். ஆனால், இன்று வரை மத்திய அரசாங்கம் அகற்றவில்லை. விழுப்புரம் - திருவண்ணாமலை - வேலூர் சாலையில் 60 கி.மீ., இடைவெளியில் வசூல் மையம் அமைக்கப்பட வேண்டும். ஆனால் 57 கி.மீ., தொலைவில் வசூல் மையத்தை அமைத்துள்ளனர். நகராட்சி பகுதியில் இருந்து 10 கி.மீ., கடந்துதான் வசூல் மையம் அமைக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருகே இனாம்காரியந்தல் வசூல் மையத்தை அகற்ற வேண்டும் என பல கட்ட போராட்டம் நடத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என ஆட்சியர் கூறுகிறார். அதே நேரத்தில் வசூல் செய்யும் பணி தொடர்கிறது. மத்திய அரசை காரணம் காட்ட வேண்டாம். நீங்கள் (தமிழக அரசு) தெரிவித்தும் அகற்றவில்லை என்ற நிலை இருக்கும்போது, வசூல் மையத்தை மூடச் சென்ற எங்களை, அரசாங்கம் ஏன் தடுக்க வேண்டும்? காவல் துறை ஏன் தடுக்க வேண்டும்? ஒவ்வொரு ஆண்டும் கோடி கணக்கான ரூபாயை, மக்களிடம் இருந்து வசூல் மையம் கொள்ளை அடிக்கப்படுகிறது.

வசூல் மையத்தை உடனடியாக அகற்ற வேண்டும். அதுவரை, திருவண்ணாமலையை சுற்றி, 20 கி.மீ., தொலைவில் இருக்கும் மக்களிடம் இருந்து பணம் வசூலிக்கக்கூடாது. இதற்காக பாஸ் வழங்க வேண்டும். நீர்நிலை புறம் போக்கு இடத்தில் குடிசை வீடு இருந்தால் இடிக்கப்படுகிறது. நீரோடையில் உள்ள வசூல் மைய அலுவலகத்தை ஏன் அகற்றவில்லை. சுங்கச் சாவடியை அகற்றவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

ஆளுநரின் அராஜகம்: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை திருப்பி அனுப்பி உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் ஆராஜகமானது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 42 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். நடுவீதியில் குடும்பங்கள் நிற்கிறது.

மக்களை காப்பாற்றுவதற்காக, தமிழக சட்டப்பேரவைவில் தீர்மானம் நிறைவேற்ற மசோதாவை அனுப்பி வைத்தால், 2-வது முறையாக விளக்கம் கேட்கிறார். 4 மாதம் கடந்து ஏன் விளக்க கேட்கிறீர்கள்? இதற்கு விளக்கம் கொடுத்தால், மீண்டும் 4 மாதம் கழித்து மற்றொரு விளக்கம் கேட்பார். ஆன்லைன் சூதாட்டம் நடத்தக் கூடிய நிறுவனத்தின் கூட்டாளியாக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளார். இதனால்தான், ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்” என்றார்.

பின்னர் அவர், சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷை சந்தித்து வலியுறுத்தினார். முன்னதாக, தீபம் நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள இனாம்காரியந்தல் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மூடச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x