Published : 09 Mar 2023 02:16 PM
Last Updated : 09 Mar 2023 02:16 PM

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் செல்போன்களை எடுத்து செல்வதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவின் மிக முக்கிய ஆன்மீக ஸ்தலங்களில் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உள்பட பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட இந்த பிரம்மாண்ட கோயில் காண்போரை வியக்க வைக்கக்கூடியது. மதுரையில் ஏராளமான கோயில்கள் இருந்தாலும் உள்ளூர் மக்களுக்கு மீனாட்சியம்மன் கோயில் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறது. தங்கள் வீடுக்களில் நடக்கும் சுப காரியங்கள், திருமண நாள், பிறந்த நாள் உள்ளிட்ட அனைத்து விஷேசங்களுக்கும் மீனாட்சிம்மன் கோயிலுக்கு வருவதை உள்ளூர் மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருமணங்களுக்கு பெண், மாப்பிள்ளை பார்க்கும் படலம்கூட மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும்.

நிச்சயதார்த்தம், திருமணம் முதல் சொத்துகளை விற்பது, வாங்குவது வரை குடும்பமாக வந்து மீனாட்சிம்மன் கோயில் பிரகாரங்களில் அமர்ந்து பொதுமக்கள் முடிவெடுப்பார்கள். தற்போது இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்காகவும் அம்மனை தரிசிக்கவும் வருவோர், தங்கள் செல்போன்களையும், செறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு கோயிலுக்குள் வர வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இதற்காக ஒவ்வொரு கோபுர வாசலிலும் தனித் தனியாக செல்போன் காப்பகமும், செறுப்பு காப்பகமும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்குள் செல்வோர் அங்குள்ள பணியாளர்களிடம் செல்போன்களையும், செறுப்புகளையும் ஒப்படைத்து விட்டு டோக்கன் பெற்று வர வேண்டும். இதற்கு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வார விடுமுறை நாட்களிலும், விஷேச நாட்களிலும் செல்போன்களை ஒப்படைக்க அரைமணி நேரத்திற்கு மேல் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

இதேபோல், செறுப்பு வைப்பதற்கான வரிசையிலும் அரை மணி நேரத்திற்கு மேல் நிற்க வேண்டி உள்ளது. அதன்பிறகு கோயிலுக்குள் செல்ல பாதுகாப்பு பரிசோதனைக்காகவும் வரிசையில் நிற்க வேண்டும். இந்த பரிசோதனைகள் முடிந்த பிறகு அம்மனை தரிசிக்க 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய உள்ளது. வார நாட்களில் ஓரளவு கூட்டம் குறைவாக வருவதால் இந்த சிரமங்கள் கொஞ்சம் குறைவாக உள்ளன. செல்போன் ஒப்படைப்பிற்காக பல சிரமங்களை பொதுமக்கள் சந்திக்க வேண்டி இருப்பதால் தற்போது மீனாட்சியம்மன் கோயிலில் நடக்கும் உள்ளூர் மக்களுடைய குடும்ப விஷேச சுப நிகழ்ச்சிகள் குறைந்துவிட்டன.

அம்மன் சன்னதி, சுவாமி சன்னதிகளில் செல்லும்போது ஜாம்மர் இருப்பதால் செல்போன் சிக்னல் கிடைக்காது. எனவே, செல்போன் எடுத்துச் செல்வதால் தரிசனத்திற்கு எந்த இடையூறும் இருப்பதில்லை. பாதுகாப்பு அச்சுறுத்தலால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பல அடுக்கு சோதனைக்கு பிறகே உள்ளே நுழைய அனுமதிக்கின்றனர். அதனால், செல்போன்களை எடுத்து செல்வதால் எந்த சட்டவிரோத செயல்களும் நடக்க வாய்ப்பில்லை. எனவே, கோயிலுக்குள் செல்லும்போது செல்போன்களை எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: "தற்போது செல்போன்கள் அன்றாட வாழ்க்கையில் அடிப்படை பயன்பாடாக உள்ளன. தூங்கும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் செல்போன்களை விட்டு 5 நிமிடங்கள் கூட பிரிய முடியாத நிலை உள்ளது. செல்பான்களில் குடும்ப புகைப்படங்கள் முதல் பல்வேறு ஆவணங்களும் வைக்கப்படுகின்றன. 3 மணி நேரம் செல்போனை ஒரு இடத்தில் ஒப்படைத்துவிட்டு கோயிலுக்குள் செல்பவர்களால் நிம்மதியாக சாமி தரிசனமும், சுற்றிப்பார்க்கவும் முடிவதில்லை. கடந்த காலங்களில் உள்ளூர் மக்களும் இளைஞர்களும் தினமும் மாலை நேரத்தில் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

செல்போன்களை ஒப்படைக்க வேண்டும் என்ற தொந்தரவால் அவர்கள் கோயிலுக்கு முன்புபோல் வருவதில்லை. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் செல்போன் தடையால் மீனாட்சிம்மன் கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்ததை ஒப்புக் காண்ட உள்ளூர் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர், செல்போன் எடுத்து செல்வதற்கு விதிவிலக்கு பெறுவதற்கு தமிழக அரசிடம் வலியுறுத்துவதாக உறுதியளித்து இருந்தனர். ஆனால், இதுவரை அவர்கள் அதற்கான முயற்சிகளை செய்யததாக தெரியவில்லை. எனவே, மீனாட்சி அம்மான் கோயிலுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்வதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x