Published : 09 Mar 2023 01:38 PM
Last Updated : 09 Mar 2023 01:38 PM
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி தொடருகிறது என்றும் இரு கட்சிகளுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதித்தோம்" என்றார்.
பொதுச் செயலாளர் தேர்வு குறித்து கேள்விக்கு, பொதுச் செயலாளர் தேர்வு குறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை; பொதுச் செயலாளர் தேர்வு நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் என தெரிவித்தார்.
அதிமுக, பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, ''அதிமுக - பாஜக கூட்டணி தொடருகிறது. அதிமுக - பாஜக மோதல் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்ன மோதல் உள்ளது? மோதல் இல்லை. ஐடி விங்கை சேர்ந்தவர்கள் சிலர் கருத்து கூறினார்கள். தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி. தமிழக அளவில் அதிமுக தலைமையில் கூட்டணி'' என்றார்.
தனது தாயார் ஜெயலலிதாவை விட 100 மடங்கு பவர்ஃபுல் என்றும் தனது மனைவி ஜெயலலிதாவை விட 1000 மடங்கு பவர்ஃபுல் என்றும் அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு, "அண்ணாமலை தலைவர்கள் பற்றி கூறுவது அவருடைய தனிப்பட்ட கருத்து. எங்களுடைய தலைவருக்கு நிகரானவர் இனி தமிழகத்தில் பிறக்கப் போவது கிடையாது" என்று தெரிவித்தார்.
ஓபிஎஸ் தொடர்பான கேள்விக்கு, ''ஓபிஎஸ் நடத்துவது கட்சி இல்லை. அவர் கடை நடத்தி வருகிறார். 99 சதவீத நிர்வாகிகள் இபிஎஸ் தலைமையில் தான் உள்ளனர். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தவிர அனைவரும் எங்களின் சகோதரர்கள் தான்" என ஜெயக்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT