Last Updated : 09 Mar, 2023 12:42 PM

 

Published : 09 Mar 2023 12:42 PM
Last Updated : 09 Mar 2023 12:42 PM

புதுச்சேரியில் கடந்த நிதி ஆண்டில் தனி நபர் வருவாய் 3.51% உயர்ந்துள்ளது: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: புதுச்சேரியின் தனிநபர் வருவாய் 2021-22ல் இருந்த ரூ. 2.14 லட்சத்திலிருந்து 2022-23ல் ரூ.2.22 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும் இது 3.51 விழுக்காடு அதிகம் என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் உரையுடன் இன்று தொடங்கியது. மகாகவி சுப்ரமணிய பாரதியின் வரிகளை வாசித்து ஆளுநர் தமிழிசை உரையாற்றினார். ஒரு மணி நேரம் அவரது உரை நீடித்தது. அதன் முக்கிய விவரம்: "நிதி மேலாண்மையைப் பொருத்த வரையில் புதுச்சேரி அரசு 2022-23 நிதியாண்டில் மத்திய அரசின் கூடுதல் நிதி உதவியாக ரூ.1400 கோடி கிடைக்கப்பெற்றது. 2022-23ல் நிதி ஆண்டில் மொத்த செலவினங்களுக்காக ரூ. 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 2022-23ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியாக ரூ. 39,019 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது 2021-22ம் ஆண்டை விட 4.09 விழுக்காடு அதிகம். புதுச்சேரியின் தனிநபர் வருவாய் 2021-22ல் ரூ. 2.14 லட்சத்திலிருந்து 2022-23ல் ரூ.2.22 லட்சமாகியுள்ளது. இது 3.51 விழுக்காடு அதிகம். புதுச்சேரியிலுள்ள ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியில் உயிரி தொழில் நுட்பவியலில் ஆராய்ச்சி வசதிகளை ஏற்படுத்த பொது அறிவியல் ஆய்வக வசதி நிறுவ ரூ. 2 கோடி தரப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இலவச அரிசி திட்டத்திற்கு 2022-23ம் நிதியாண்டில் ரூ. 200 கோடி செலவிடப்பட்டு 3.53 லட்சம் பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். நலிவுற்ற கூட்டுறவு நிறுவனங்களை மீட்க ரூ. 30 கோடி நிதி தரப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் முழு ஜீனோம் சீக்வென்சிங் இயந்திரம் ரூ. 3.84 கோடியில் வாங்கப்பட்டு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளது.

2023-24ம் ஆண்டு இறுதியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலின் மொத்த கொள்முதல் 600 எம்யூவை எட்டும். ஒடிசாவிலுள்ள தலிபராவில் உத்தேசிக்கப்பட்டுள்ள 2400 மெகாவாட் மின் ஆலையிலிருந்து 100 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய புதுச்சேரி அரசுக்கும் நெய்வேலி அனல்மின் நிலையத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

2022-23ல் 2.50 மெகாவாட் திறனுள்ள சூரிய மின் உற்பத்தி பேனல்கள் மேல் தளங்களில் அமைக்கப்பட்டு மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை ரூ. 767 கோடி முன் பணத்தை கொடுத்து வாங்கியதால் ஊக்கத் தொகையாக ரு. 11.5 கோடி கிடைத்துள்ளது. சென்டாக் நிதியுதவி ரூ.20.49 கோடி தரப்பட்டுள்ளது.

அம்ருத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் குடிநீர் வழங்கல், நீர்நிலைகளை மீட்டெடுத்தல், பாதாள சாக்கடை வசதிகள் மற்றும் கழிவுநீர் மேலாண்மை திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 150 கோடி ஒப்புதல் தந்துள்ளது. புதுச்சேரி துறைமுகத்தில் சரக்குகளை கையாள சுங்கத்துறை ஒப்புதல் பெறப்பட்டு வணிக ரீதியிலான சரக்குகளை கையாள புதுச்சேரி துறைமுகம் தயாராக உள்ளது.

கரோனாவுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் வாகன இயக்க கண்காணிப்பு மையத்துக்கான கட்டுப்பாட்டு அறையானது மத்திய நிதி உதவியுடன் ரூ. 4.6 கோடியில் கட்டப்படுகிறது. மூன்று சக்கர மின் வாகன ஓட்டுநர் பயிற்சியை பெண்களுக்கு இலவசமாக தரும் திட்டம் அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி தர ரூ. 40 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி தரும் திட்டத்தில் முதல் கட்டமாக 13,339 பயனாளிகளுக்கு ரூ. 1.33 கோடி ஜனவரி முதல் வழங்கப்படுகிறது. கரோனாவால் தாய், தந்தையை இழந்த 12 குழந்தைகளுக்கு நிதி உதவியாக ரூ. 11.42 லட்சம் தரப்பட்டுள்ளது.

முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், திருமணமாகாத பெண்கள், திருநங்கைகள் ஆகிய 1.64 லட்சம் பேருக்கு ரூ. 455.35 கோடி தரப்பட்டுள்ளது. அனைத்து விதங்களிலும் புதுச்சேரி நன்கு முன்னேறி வருகிறது, சமூக பொருளாதாரத்தில் முன்னேறி, வறுமையை போக்குவதில் அரசு உறுதியாகவுள்ளது. அனைத்து பிராந்தியங்களிலும் நிதியை பகிர்ந்தளித்து பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை போக்கியுள்ளது" என தமிழிசை தனது உரையில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x