Published : 09 Mar 2023 06:09 AM
Last Updated : 09 Mar 2023 06:09 AM
சென்னை: சென்னை பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ.71.81 கோடியில் கட்டப்பட உள்ள சிறப்பு மருத்துவமனைக் கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல்நாட்டினார்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை அவரது தொகுதியான கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குச் சென்றார். ஜவகர் நகர் 1-வது சர்க்குலர் சாலையில் உள்ள சட்டப்பேரவை அலுவலகம் அருகில், பொதுமக்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில், தரை மற்றும் 3 தளங்களுடன் 1.18 லட்சம் சதுரஅடி பரப்பில், ரூ.71.81 கோடியில் கட்டப்பட உள்ள சிறப்பு மருத்துவமனைக் கட்டிடத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
புதிதாகக் கட்டப்படும் சிறப்பு மருத்துவமனைக் கட்டிடத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக வசதிகளுடன் கூடிய ஆண், பெண் புறநோயாளிகள் பிரிவு, கூழாங்கல் பதித்த நடைபயிற்சிக் கூடம், இயன்முறை சிகிச்சைக் கூடம், உள்நோயாளிகள் வார்டு, எக்கோ ஆய்வகம், மகப்பேறு பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன.
நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.3.49 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் திறந்துவைத்தார். மேலும், ரூ.1.14 கோடி மதிப்பில் வில்லிவாக்கம் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் கட்டப்பட உள்ள பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுதவிர, ரூ.61.98 கோடியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், துணை மேயர் மு.மகேஷ்குமார், சுகாதாரத் துறைச்செயலர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பாபிரபாகர் சதீஷ் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT