Published : 09 Mar 2023 06:44 AM
Last Updated : 09 Mar 2023 06:44 AM
திருச்சி: ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் விவகாரத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகளின் உத்தரவை செயல்படுத்திய இளமின் பொறியாளரை பணியிடை நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்து, அதன்படி பெரும்பாலான இணைப்புகள் இணைக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில், ஒரு வீட்டுக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவற்றை ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டும் என மின்வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதன் அடிப்படையில், அதற்கான பணியில் மின்வாரிய பொறியாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு இணைக்கப்படுவதால் ஒவ்வொரு மின் இணைப்புக்கும் கிடைக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டு, ஒரு இணைப்புக்கு மட்டுமே கிடைக்கும். இதுதொடர்பாக மின் வாரியம் சார்பில் மின் நுகர்வோருக்கு அனுப்பப்படும் நோட்டீஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நோட்டீஸூக்கு மறுப்பு தெரிவித்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அவ்வாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இந்தநிலையில், மின் நுகர்வோருக்கு நோட்டீஸ் அனுப்பிய திருச்சி மின்பகிர்மான வட்டம், திருவெறும்பூர் பிரிவில் இளமின் பொறியாளராக பணியாற்றி வந்த ஆர்.கிருஷ்ணமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மேற்பார்வை பொறியாளர் ஞானபிரகா சம் நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்த நடவடிக்கையைக் கண்டித்து மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதுகுறித்து மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுத் தலைவர் எஸ்.ரங்கராஜன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி கடந்த பிப்.24-ம் தேதி அன்று திருச்சியில் மின்வாரியத்தின் அனைத்து நிலை பொறியாளர்களுடன் ஆய்வுகூட்டத்தை நடத்தினார். அப்போது அவர், ‘10.9.2022 முதல் ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே வழங்க வேண்டும் என விதி உள்ளது.
இதை மீறி ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு நோட்டீஸ் தந்துஅவற்றை ஒரே மின் இணைப்பாக இணைக்க வேண்டும்.மேலும், ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருக்க நுகர்வோர் விரும்பினால், பாகப்பிரிவினை அல்லது வாடகைதாரர் ஒப்பந்தம் ஆகியவற்றை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து மின் வாரியத்திடம் ஒப்படைத்தால் மட்டுமே ஒருவர் பெயரில் மற்றொரு மின் இணைப்பு வழங்க வேண்டும்.
இதை மின் பொறியாளர்கள் ஆய்வு செய்து, எத்தனை பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது? எத்தனை இணைப்புகள் ஒரே மின் இணைப்பாக இணைக்கப்பட்டுள்ளன? எத்தனை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன? ஆகிய விவரங்களை தினந்தோறும் அந்தந்த கோட்ட பொறியாளர்கள் மூலம் அறிக்கை அனுப்ப வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், மின்வாரியத் தலைவரின் உத்தரவை செயல்படுத்திய இள மின் பொறியாளர் ஒருவரை பலிகடா ஆக்கும் வகையில் பணியிடை நீக்கம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த பணியிடை நீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்து, மீண்டும் அவர் அதே இடத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் உயர் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (நேற்று) ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், மார்ச் 10 முதல் மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.திருச்சி தென்னூர் மின் வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT