Last Updated : 09 Mar, 2023 06:33 AM

 

Published : 09 Mar 2023 06:33 AM
Last Updated : 09 Mar 2023 06:33 AM

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுக்கு சொந்த கட்டிடங்கள்

கோப்புப்படம்

புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கட்சியை வளர்ப்பதில் பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் சென்னையை அடுத்து தமிழகத்தின் 3 மாவட்டங்களில் பாஜக அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. மேலும் 10 மாவட்டங்களில் அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளன.

இதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை கிருஷ்ணகிரி செல்கிறார். அங்கு பாஜக அலுவலக திறப்பு விழாவில் கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்கின்றனர். கிருஷ்ணகிரியில் இருந்தபடியே காணொலி மூலம் மேலும் 9 மாவட்ட அலுவலகங்களை ஜே.பி.நட்டா திறந்து வைக்கிறார்.

இப்பட்டியலில் தருமபுரி, திருச்சி, நாமக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் டெல்லி வந்திருந்த பாஜக கட்டிடக் கமிட்டி தலைவரும் மாநில துணைத் தலைவருமான எம்.சக்கரவர்த்தி கூறும்போது, “மக்களவை தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் கட்சி அலுவலகங்கள் திறக்கப்படுகின்றன. இவற்றில் கூட்ட அரங்கம், நூலகம், உணவு விடுதி, தங்கும் அறைகள், ஐ.டி. பிரிவு, மாவட்ட நிர்வாகிகள் அறைகள் உள்ளிட்ட வசதிகள் அமைகின்றன. இதர 9 மாவட்டங்களிலும் கட்டிடப்பணிகள் வேகமாக நடைபெறுகின்றன” என்றார்.

சமீபத்தில் முடிந்த தேர்தல்களில் திரிபுரா, நாகாலாந்தில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வென்றுள்ளன. மேகாலயாவில் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைகிறது. அடுத்து கர்நாடகா, ராஜஸ்தான், ம.பி, சத்தீஸ்கர் மாநிலங்களில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இச்சூழலில், கர்நாடகா தேர்தல் ஆலோசனைக்காக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று பெங்களூரு வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x