Last Updated : 08 Mar, 2023 11:19 PM

1  

Published : 08 Mar 2023 11:19 PM
Last Updated : 08 Mar 2023 11:19 PM

சேலம் கோட்டத்தில் ரயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை: 11 மாதத்தில் ரூ.14.65 கோடி அபராதம் வசூல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரையிலான காலத்தில், ரயில் பயணிகளிடம் நடத்தப்பட்ட டிக்கெட் பரிசோதனையில், டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது, கட்டணம் செலுத்தாமல் சுமைகளை எடுத்துச் செல்வது உள்பட டிக்கெட் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் மொத்தம் ரூ.14.65 அபராதம் வசூலிக்கப்பட்டது.

சேலம் ரயில்வே கோட்டம் வழியாக செல்லும் ரயில்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள், பயணிகளிடம் திடீர் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் மட்டும், டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில், 53 ஆயிரத்து 598 முறைகேடுகள் கண்டறியப்பட்டு மொத்தம் ரூ.14.65 கோடி அபராதம் வசூலித்துள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டில் அபராதமாக ரூ.9.74 கோடி வசூலான நிலையில், தற்போது இரண்டு மாதத்தில் மட்டும் ரூ.4.90 கோடி (50.33 சதவீதம்) கூடுதலாக வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.9.49 கோடியாக இருந்தது. சாதாரண வகுப்பு டிக்கெட்டில், உயர் வகுப்பில் பயணிப்பது போன்ற முறையற்ற பயணத்தில் ஈடுபட்டதாக 25,397 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் ரூ.1.26 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் முறையற்ற பயணம் செய்ததாக 4,026 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.19.99 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. சுமைகளை கட்டணம் செலுத்தாமல் எடுத்துச் சென்றது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக சரக்குகளை எடுத்து சென்றவர்கள்மீது மொத்தம் 507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, கடந்த ஏப்ரல்- பிப்ரவரி இடையிலான 11 மாத காலத்தில், டிக்கெட் முறைகேடுகள் தொடர்பாக பயணிகளிடம் 53,598 முறை பரிசோதனை நடத்தி, ரூ.14.65 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x