Last Updated : 09 Mar, 2023 12:28 AM

 

Published : 09 Mar 2023 12:28 AM
Last Updated : 09 Mar 2023 12:28 AM

மகளிர் தினம் கொண்டாட மதுரை மாநகர பெண் காவலர்களுக்கு விடுமுறை - காவல் ஆணையரின் உத்தரவால் உற்சாகம்

மகளிர் தின விழாவை முன்னிட்டு மதுரை மாநகர காவல் மகளிர் தின விழா ஆட்டம் ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பாக நடைபெற்றது. படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை மாநகரில் மகளிர் தின விழா கொண்டாட ஓட்டுமொத்த பெண் போலீஸாருக்கும் ஒருநாள் விடுமுறை அளித்து, மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் உத்தரவிட்டது, தங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது என பெண் காவலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று மகளிர் தினத்தையொட்டி, மதுரையில் கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு போட்டிகள் நடத்தியும், கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தும் கொண்டாடினர்.

இந்நிலையில், மதுரை மாநகரத்தில் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பணிபுரியும் சுமார் 1300க்கும் மேற்பட்ட பெண் காவல்துறையினர் மகளிர் தினம் கொண்டாடும் விதமாக இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்க, மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். இதையொட்டி, இன்று காலை அந்தந்த காவல் நிலையங்கள் வாயிலாக பெண் காவலர்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

ஆணையரின் உத்தரவை மைக் மூலமும் அதிகாரிகள் அறிவித்தனர். இந்த உத்தரவு பெண் காவலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து மாநகர பெண் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் இணைந்து மகளிர் தின விழாவை சிறப்பாக கொண்டாட மதுரை - சர்வேயர் காலனி ரோட்டிலுள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர்.

இதில் மகளிருக்கான பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்றனர். சிலர் உற்சாக மிகுதியால் ஆடியும், பாடல்கள் பாடியும் மகிழ்வித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவரும் கலர் ஆடைகள் அணிந்து உற்சாகம் காட்டினர். குரூப் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். இவ்விழாவில் மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், டிஐஜி பொன்னி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்று, மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விழாவில் கலந்துகொண்ட பெண் காவலர்கள் கூறுகையில், ‘‘ஏற்கனவே 2020ல் மகளிர் தினத்திற்காக ஒட்டுமொத்த பெண் காவலர்களுக்கும் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதன்பின், தற்போதைய காவல் ஆணையர் ஒருநாள் முழுவதும் சிறப்பு விடுமுறை அளித்துள்ளார். இது சந்தோஷமாக இருக்கிறது. தங்களை மறந்து ஒருநாள் மகிழ்ச்சியுடன் விழா கொண்டாடினோம். இதுபோன்ற தருணம் தொடரவேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x