Published : 08 Mar 2023 10:41 PM
Last Updated : 08 Mar 2023 10:41 PM

மகளிர் தினம் | மதுரையில் ‘ஒரு மாணவிக்கு ஒரு மரக்கன்று திட்டம்’ - சிறப்பாக பராமரிப்போருக்கு தங்க நாணயம் பரிசு

திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 1800 பேருக்கு உலக மகளிர் தினத்தை  முன்னிட்டு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மதுரை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘ஒரு மாணவிக்கு ஒரு மரக்கன்று திட்டம்’ மூலம் திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 1800 பேருக்கு பழ மரக்கன்றுகள் இன்று வழங்கப்பட்டன. உடனடியாக வீடுகளில் நட்டு பராமரிக்கும் மாணவிகளில் ஒருவருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கு மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்துகொள்ளும் வகையில் யங் இண்டியன்ஸ் மதுரை - பருவநிலை மாற்றம் குழு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்கள் பள்ளிகள் தோறும் சென்று இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி வருகின்றனர். மரக்கன்றுகள் வழங்குவதோடு இல்லாமல் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தனிக்கவனம் செலுத்தி நட்டு பராமரிக்கும் மாணவி ஒருவருக்கு ஒருகிராம் தங்க நாணயம் பரிசும் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

அதனையொட்டி திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் விழா தலைமையாசிரியர் கர்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் யங் இண்டியன்ஸ் மதுரை- பருவநிலை மாற்றக்குழு தலைவர் பொன் குமார், துணைத்தலைவர் சிவா ஆகியோர் பள்ளி மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினர். இதில் மாணவிகள் விரும்பிய
பழ வகை மரக்கன்றுகளான மா, பலா, கொய்யா, மாதுளை, நெல்லி உள்பட பல்வேறு வகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து யங் இண்டியன்ஸ் மதுரை- பருவநிலை மாற்றம் குழு தலைவர் பொன் குமார் கூறும்போது: "உலக நாடுகளிடையே பருவநிலை மாற்றம் தற்போது பெரும் சவாலாக உள்ளது. அதுகுறித்து வருங்கால சமுதாயமான பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம். கென்யா நாட்டைச் சேர்ந்த வாங்காரி மாத்தாய் மரக்கன்றுகள் நடுவதன் அவசியம், விழிப்புணர்வு ஏற்படுத்தி 5 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான முன்னெடுப்புகளை செய்தார். அதற்காக நோபெல் பரிசும் பெற்றார்.

அவரைப்போல் கதைகள் சொல்லி பள்ளிகள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மரம் வளர்த்தால் பணம் என ஊக்குவிக்கிறோம். இங்குள்ள 1800 மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கியுள்ளோம். அதனை அவரவர் வீடுகளில் நட்டு உடனடியாக மேப் டேக் மூலம் போட்டோ எடுத்து அனுப்புவோரில் குலுக்கல் முறையில் தேர்வாகும் மாணவி ஒருவருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு எனவும் அறிவித்துள்ளோம். அதேபோல், அப்பள்ளி தலைமையாசிரியரும் ஓராண்டு நட்டு பராமரிக்கும் 10 மாணவிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் பரிசு எனவும் அறிவித்துள்ளார். இதனால் மாணவிகள் விருப்பமுடன் மரக்கன்றுகளை வாங்கிச் சென்றுள்ளனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x