

மதுரை: "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரவாக்குறிச்சி தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர் என்பதை உணர வேண்டும். அவரைப் பொறுத்தவரை அரவக்குறிச்சி தொகுதி மக்களால் நிராகரிக்கப்பட்டவர் அவர்" என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
மதுரையில் காங்கிரஸ் எம்பி, மாணிக்கம் தாகூர் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘நான் ஒரு தலைவர்’ என்று பேசியிருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "தலைவன் என்பவர் முதலில் அவரது சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற வேண்டும். தன்னைத்தானே எம்ஜிஆர், கலைஞர் என்று கூறுவது அல்லது ஜெயலலிதா என சொல்லிக்கொண்டிருப்பது அண்ணாமலையை காமெடி பீஸாக்கி விடும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரவாக்குறிச்சி தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர் என்பதை உணர வேண்டும். அவரைப் பொறுத்தவரை அரவக்குறிச்சி தொகுதி மக்களால் நிராகரிக்கப்பட்டவர் அவர்.இந்த நிலையில், அவர் தன்னைத்தானே தலைவன் என்று கூறிக்கொள்வது, நடிகர் வடிவேலு நானும் ரவுடிதான் என்று சொல்வதைப் போல உள்ளது.
எனவே அண்ணாமலை, ஒரு சட்டமன்றத் தேர்தலிலோ, நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது ஒரு பஞ்சாயத்து தேர்தலிலோ வெற்றி பெற்று, ஒரு பஞ்சாயத்தின் தலைவர் என்று கூறட்டும். அதுதான் நியாயமானதாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அண்ணாமலை இங்கு தோசையோ, இட்லியோ, சப்பாத்தி சுடவோ வரவில்லை. எப்போதும் என்னுடைய தலைமைப் பண்பு ஒரு மேனேஜரைப் போல இருக்காது. மேனேஜர் போல தாஜா வேலை எல்லாம் செய்யமாட்டேன். நான் தலைவன். ஒரு தலைவன் எப்படியிருக்க வேண்டுமோ அப்படித்தான் நான் இருப்பேன். நான் எடுக்கும் சில முடிவுகள், சிலருக்கு அதிர்ச்சியளிக்கத்தான் செய்யும். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டே இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.