Published : 08 Mar 2023 06:48 PM
Last Updated : 08 Mar 2023 06:48 PM
சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.70 கோடியில் இதுவரை ரூ.34.76 கோடியை மட்டுமே வார்டு மேம்பாட்டுக்கு செலவு செய்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால், 2016 முதல் 2022 பிப்., வரை கவுன்சிலர்கள் இல்லாத நிலை இருந்தது. அப்போது சென்னை மாநகராட்சியில் ஆணையர் முதல் உதவி பொறியாளர்கள் வரை சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் நடைபெற்று மார்ச் மாதம் முதல் மேயர் பிரியா தலைமையில் கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 175-க்கு மேல் வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
கவுன்சிலர்கள் பொறுப்பேற்று, அடுத்தடுத்து நடந்த கவுன்சிலர் கூட்டங்களில், தங்களது வார்டு மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இதையேற்று, 30 லட்சம் ரூபாயில் இருந்து, 35 லட்சம் ரூபாயாக, கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி உயர்த்தப்பட்டது. அந்த நிதியும் போதவில்லை என கவுன்சிலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கவுன்சிலர்கள் பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அதில், மொத்தமுள்ள 70 கோடி ரூபாய் வார்டு மேம்பாட்டு நிதியில், 66.32 கோடி ரூபாய் மதிப்பில் 660 பணிகளை மேற்கொள்ள கவுன்சிலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில், 58.35 கோடி ரூபாய் மதிப்பில் 559 பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டு, 34.80 கோடி ரூபாய் மதிப்பில் 406 பணிகளுக்கு மட்டுமே இதுவரை ஒப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 3.17 கோடி ரூபாய் மதிப்பில் 46 பணிகள் முடிவடைந்துள்ளன.
மண்டல வாரியாக கவுன்சிலர்கள் செலவிட்ட நிதி விபரம்:
மண்டலங்கள் - பணிகளின் எண்ணிக்கை – தொகை (ரூ)
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "தற்போது 66.32 கோடி ரூபாய்க்கான பணிகளுக்கு அனுமதி அளித்தாலும், திட்ட அறிக்கை தயாரிப்பு போன்றவற்றால் தற்போது வரை, 34.80 கோடி மதிப்பிலான பணிகளுக்கு மட்டுமே ஒப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
2022 – 23-ம் நிதியாண்டு முடிய 22 நாட்களே உள்ள நிலையில், ஏற்கெனவே ஒப்பம் அளிக்கப்பட்டது மற்றும் புதிதாக ஒப்பம் கோரப்பட்டது என கணக்கிட்டால் 58.35 கோடி ரூபாய்க்கான பணிகள் தான் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மீதம் 11.65 கோடி ரூபாய் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், மார்ச் 31ம் தேதிக்குள், கவுன்சிலர்கள் அனுமதித்த தொகையில் இருந்து வார்டு மேம்பாட்டு நிதியை மேற்கொள்ள அரசிடம் அனுமதி கோரப்படும். அரசு அனுமதி அளித்தால், 66.32 கோடி ரூபாய்க்கான பணிகள் ஒப்பம் கோரப்பட்டு பணிகள் துவங்கப்படும். அப்படியென்றால் 3.68 கோடி ரூபாய் நிதி பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT