Published : 08 Mar 2023 06:11 PM
Last Updated : 08 Mar 2023 06:11 PM
சென்னை: பதவியை தவறாக பயன்படுத்திய கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கட்டம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவண்ணாமலை மாவட்டம் வெங்கட்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் தாக்கல் செய்த மனுவில், "உள்ளாட்சி அமைப்புகளுக்கான பெண் தலைவர்கள் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும். அவர்கள் ஏதேனும் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் பெண் தலைவர்களால் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை.
பெண் தலைவர்களின் பணிகளில் கணவர் உள்ளிட்டோர் தலையிடுகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கட்டம்பாளையம் பஞ்சாயத்து தலைவராக உள்ள உண்ணாமலையின் கணவர் பழனி, ஊராட்சி மன்ற தலைவர் இருக்கையிலேயே அமர்ந்து கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தேன். ஆனால், அந்தப் புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். மேலும், இந்த வழக்கில் புதுச்சேரி அரசை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பெண் பிரதிநிதிகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய இருமாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT