Published : 08 Mar 2023 12:54 PM
Last Updated : 08 Mar 2023 12:54 PM
சென்னை: அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிடக் கூடாது என்றும், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (மார்ச் 8) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், "கல் வீசினால் உடைய அதிமுக கண்ணாடி இல்லை. அதிமுக என்பது கடல். கடலில் கல் வீசினால் கல் தான் காணாமல் போகும்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எழுச்சியுடன் உள்ள காரணத்தால், விருப்பப்பட்டு அதிமுகவில் இணைகின்றனர். இதை ஏற்றுக் கொள்கிற பக்குவம் அரசியல் கட்சி தலைவருக்கு இருக்க வேண்டும். அண்ணாமலைக்கும் இருக்க வேண்டும். அதிமுக அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு இருப்பதால், அனைவரும் வந்து இணைகின்றனர். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்க கூடாது.
எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பாஜகவினர் எரிப்பது போன்ற நிகழ்வுகளை அக்கட்சியின் தலைவர் கட்டுப்படுத்த வேண்டும் என்றும். அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டுள்ளது. அவர்கள் கிளர்ந்து எழுந்தால் என்ன ஆகும்" என்று தெரிவித்தார்.
குறிப்பாக நான் ஜெயலலிதா போன்ற தலைவர் என்று அண்ணாமலை கூறியது தொடர்பாக பேசிய ஜெயக்குமார், "அண்ணாமலை எப்படி தலைவர் ஆனார் என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், நான் ஜெயலலிதா போன்ற தலைவர் என்று சொல்லக் கூடாது. ஜெயலலிதா மாதிரி ஒரு தலைவர் இனி பிறக்க போவது இல்லை" என்று தெரிவித்தார்.
பாஜக, அதிமுக இடையில் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் கூட்டணியை பாதிக்குமா என்ற கேள்விக்கு, அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட இருவரும் கூறியுள்ளனர் என்றார்.
கடந்த 4 ஆண்டு அதிமுக ஆட்சி 420 (மோசடி) ஆட்சி என்று பாஜக நிர்வாகி கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், தலைவர்கள் கூறும் கருத்துகளுக்கு மட்டுமே பதில் அளிப்பேன். மற்றவர்கள் கூறும் கருத்துகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT