Published : 08 Mar 2023 11:24 AM
Last Updated : 08 Mar 2023 11:24 AM
கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் இடம் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த பள்ளியில் செந்தில் குமரன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கோவில்பட்டி அருகே உள்ள கிழவிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதை கண்டித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் தலைமையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பெற்றோர் கூறுகையில், சிந்தலக்கரை மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் தான் அதிகம் வசிக்கிறோம்.
எங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்கவே நாங்கள் விரும்புகிறோம். சிந்தலக்கரை கிராமத்தில் செயல்பட்டு வரும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுநிலைப் பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 30 மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வந்தனர். அப்போது தான் இங்கு தலைமை ஆசிரியர் செந்தில் குமரன் பொறுப்பேற்றார்.
அதன் பின் மாணவ மாணவிகள் சேர்க்கையில் அவர் கவனம் செலுத்தி சிந்தலக்கரை மற்றும் அருகே உள்ள ராசாப்பட்டி, சமத்துவபுரம் கிராமங்களுக்கு நேரடியாக சென்று பெற்றோரிடம் பேசி மாணவ மாணவிகள் எண்ணிக்கையை அதிகரித்தார். இதனால் தற்போது பள்ளியில் 56 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நாங்கள் கூலி வேலை செய்து வருவதால் எங்களால் நேரத்துக்கு குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வந்து விடுவதில் சிரமம் இருந்தது.
இதனை கருத்தில் கொண்ட தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் மாணவ மாணவிகளை ஆட்டோவில் தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தார். அவர் இங்கு பொறுப்பேற்ற பின்னர் பள்ளிக் கல்வித் துறை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெறும் போட்டிகளில் மாணவ, மாணவிகளை பங்கேற்க ஊக்கப்படுத்தினார். இதனால் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளனர்.
அவரை திடீரென கோவில்பட்டி அருகே உள்ள கிழவிப்பட்டி கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நாங்கள் எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அவரது இடம் மாறுதலை ரத்து செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும், என்றனர். தொடர்ந்து, தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, பெற்றோர் மட்டும் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT