Published : 08 Mar 2023 04:17 AM
Last Updated : 08 Mar 2023 04:17 AM
நாகர்கோவில்: மக்களைப் பிளவுபடுத்தி திமுக ஆட்சியை அகற்ற சதி நடப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்துக்கு ரூ.10.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடமான ‘கலைவாணர் மாளிகையை’ முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர், நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழுவுருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்து அவர் பேசியதாவது:
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 22 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது. நாம் இந்த சமுதாயத்துக்கும், தமிழகத்துக்கும், மக்களுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பணிகள் எல்லாம் எல்லோரும் போற்றும் வகையில் அமைந்துள்ளன என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், தலைவர்களும் நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதேநேரத்தில் நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உலவிக் கொண்டிருக்கும் சிலர், இந்த ஆட்சி இப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே, ‘திராவிட மாடல்’ என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களைக் கவரும் வகையில் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்களே, தொடர்ந்து இந்த ஆட்சியை விட்டால் நம்முடைய பிழைப்பு என்னாவது? என்று எண்ணி, நம்மீது புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆட்சிக்கு எப்படியாவது கெடுதல் செய்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். எங்காவது ஜாதி, மதக் கலவரத்தை ஏற்படுத்தலாமா, மக்களிடத்தில் பிளவு ஏற்படுத்தலாமா? என்றெல்லாம் திட்டமிட்டு அந்தக் காரியத்தில் ஈடுபட்டு அவர்கள் சதி செய்து கொண்டிருக்கிறார்கள்.
விரைவில் மக்களவைத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த தேர்தலைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் ஒரு சிறப்பானக் கூட்டணியை நாம் அமைத்து செயல்பட வேண்டும்.
அனைத்து தேல்தல்களிலும் மிகப்பெரியவெற்றியை நாம் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். மக்களை ஒன்றிணைத்து, வரும் மக்களவைத் தேர்தலில் மத்தியில் பாஜக ஆட்சியை அகற்ற நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற தலைவர்கள் முன்வர வேண்டும். உங்களுடைய ஒத்துழைப்போடுதான் அந்தப் பணியை நிறைவேற்றப் போகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் நேரு, பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், மனோதங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT