Published : 08 Mar 2023 07:06 AM
Last Updated : 08 Mar 2023 07:06 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள மத்திய அரசின்நிறுவனங்களில் தமிழர்கள் மட்டும்தான் பணிபுரிகின்றனர் என்ற நிலையை அடைவதே நம் இலக்காக இருக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக அரசின் ‘நான் முதல்வன்’திட்டத்தின்கீழ் போட்டித் தேர்வுகள்எனும் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் வாயிலாக பல்வேறு அரசுப் பணி தேர்வுகளை எதிர்கொள்ளும் தமிழக மாணவர்களுக்கு சிறந்த முறையில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதன்மூலம் தமிழக இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக முடியும். இதன் தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த பயிற்சி திட்டத்தை தொடங்கிவைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:மாநில அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பணியில் சேருகின்றனர். ஆனால், மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க நமது இளைஞர்கள் ஆர்வம்காட்டுவதில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) 1.5 லட்சம் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்களை தேர்வு செய்தது. அதேபோல், வங்கி, ரயில்வே போன்ற வாரியங்களும் மூலமும் பல்வேறு காலிப்பணி இடங்கள் நிரப்பப்பட்டன.
ஆனால், இந்த பணியிடங்களில் தமிழக மாணவர்கள் மிகக் குறைந்தளவிலேயே தேர்ச்சி பெற்று வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலை மாற வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த போட்டித் தேர்வு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பிரதமரைச் சந்தித்தபோது, மத்திய அரசு நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை வைத்தேன். அது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு உங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
நம் மாணவர்கள் கட்டணமின்றி பயிற்சி பெற்று, மத்திய அரசு நிறுவனங்களில் பணிகளில் சேரவும்,மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை வழங்கவும்தான் இந்த போட்டிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழர்கள் மட்டும்தான் பணிபுரிகின்றனர் என்ற நிலையை அடைவதே நம் இலக்காக இருக்க வேண்டும். இதற்காக என்னால் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, ‘‘நான் முதல்வன் திட்டம் பொறியியல் கல்லூரிகளில் தற்போது அமலில் உள்ளது. இந்த திட்டம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல்தொடங்கப்படும்’’ என்று தெரி வித்தார்.
நிகழ்வில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலர் உதயசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT