Published : 08 Mar 2023 07:15 AM
Last Updated : 08 Mar 2023 07:15 AM

பிரச்சாரத்தில் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை குறித்த பேச்சு: முதல்வர் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்குவது தொடர்பாக பேசியது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில், அதிமுக வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை புகார் அளித்துள்ளார்.

அதிமுகவின் தேர்தல் பிரிவுதுணை செயலாளரும், வழக்கறிஞருமான ஐ.எஸ்.இன்பதுரை, தேர்தல் ஆணையத்துக்கும், மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கும் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்.27-ம் தேதிநடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் மார்ச் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு 2 நாட்கள் முன்னதாக அதாவது பிப்.25-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது கூட்டணி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார்.

அப்போது, அவரது பேச்சில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் அதிகளவில் இருந்தன. அவர் தங்கள் கூட்டணி வேட்பாளருக்கு வாக்குகள் வரும் நோக்கில் சட்டவிரோதமாக வாக்காளர்களை கவரும் வகையில் பேசினார்.

பல்வேறு விதிமீறல்கள்: இதில் முக்கியமாக, விரைவில்தமிழக அரசு, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும்திட்டத்தை அமல்படுத்தப்போவ தாக தெரிவித்துள்ளார்.

இது, முழுமையான தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகும். அவர் இந்ததிட்டம் மார்ச் மாதத்தில் தாக்கலாகும் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்று பல்வேறு விதிமீறல்களை ஆளும் திமுக, தனதுபிரச்சாரத்தின்போது செய்துள்ளது.

குறிப்பாக, 100 இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து அங்கு எந்த வசதிகளையும் அளிக்காமல் வாக்காளர்கள் தங்கவைக்கப்பட்டனர். பள்ளி வளாகத்தில் பள்ளி நேரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதுகுறித்து புகார்அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் அறிவிப்பு தொடர்பாகஏற்கெனவே தேர்தல் நடத்தும் அதிகாரியிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, முதல்வரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்அனுப்ப வேண்டும். மேலும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காத தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x