Published : 08 Mar 2023 06:24 AM
Last Updated : 08 Mar 2023 06:24 AM

“தமிழகத்தில் புதிய அரசியலுக்கு பாஜக தயாராகிவிட்டது; ஜெயலலிதா போலவே முடிவெடுப்பேன்” - அண்ணாமலை கருத்து

மதுரை: ஜெயலலிதா எப்படி முடிவு எடுத்தாரோ அதேபோல்தான் என் முடிவு களும் இருக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவையொட்டி தேனியில் உள்ள ஓபிஎஸ் வீட்டுக்குச் செல்வதற்காக நேற்று பிற்பகல் மதுரைக்கு வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: தற்போது திராவிடகட்சிகள் வளர பாஜகவின் ஆட்கள் தேவைப்படுகின்றனர். பாஜகவின் வளர்ச்சி திராவிடக் கட்சிகளின் கண்களை உறுத்துகிறது. இதனால் பாஜக தலைவர்களை திராவிட கட்சிகள் விரும்புகின்றன.

தேசிய கட்சிகளின் தலைவர்கள் மேலாளர்கள்போல் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி என்னால் இருக்க முடியாது. திராவிட கட்சிகளில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அசைக்க முடியாத தலைவர்களாக இருப்பார்கள்.

அண்ணாமலை இங்கு தோசை சுடவோ, இட்லி சுடவோ, சப்பாத்தி சுடவோ இங்கு வரவில்லை. மேலாளர் பொறுப்பை ஏற்க வரவில்லை.

முடிவுகளில் பாரபட்சம் இல்லை: என்னுடைய நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கத்தான் செய்யும். ஜெயலலிதா எடுக்காத முடிவுகளா? கருணாநிதி எடுக்காத முடிவுகளா? தமிழ்நாடு பார்க்காத ஆளுமையா? அந்த மாதிரித்தான் நான் இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

தலைவராக இருப்பவர் தலைவராகத்தான் முடிவுகள் எடுப்பார். ஜெயலலிதா எப்படி முடிவு எடுத்தாரோ அதேபோல்தான் நான் எடுக்கும் முடிவுகளும் இருக்கும். தலைவன் தலைவனுக்கு தகுந்த மாதிரிதான் முடிவு எடுப்பார். இதில் பாரபட்சம் இருக்காது.

பயம், பாரபட்சம், பின்னால் போய் கை, கால்களில் விழுந்து கெஞ்சும் பழக்கம் கிடையாது. ஜெயலலிதா மீது இதே கு்ற்றச்சாட்டை வைத்திருக்கலாமே. அங்க கட்சியிலிருந்து நிறைய முன்னாள் அமைச்சர்கள் வெளியே போய் திமுகவில் சேர்ந்தபோது. அதேபோல் கருணாநிதியிடமிருந்து வெளியே வரவில்லையா? எனெனில் அவர்கள் தலைவர்கள்.

தலைவர்கள் முடிவு எடுத்தால் 4 பேர் கோபித்துக்கொண்டு வெளியே வரத்தான் செய்வார்கள். நானும் அந்த மாதிரி தலைவர்தான் தலைவர் என்ற முறையில் பயம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பேன். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும். அரசியல் கட்சி அப்படித்தான் வளர முடியும்.

பாஜக வேகம் குறையாது: எந்த நிலையிலும் பாஜகவின் வேகம் குறையாது. நான் இருக்கும் வரை கட்சி இப்படித்தான் இருக்கும். எம்பி, எம்எல்ஏ, முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு அரசியலுக்கு வரவில்லை. பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கவே வந்துள்ளேன்.

வரும் நாட்களில் என் பேச்சில் இன்னும் காரம் இருக்கும். தமிழகத்தில் புதிய அரசியல் வரவேண்டும். அதற்கு பாஜக தயாராகிவிட்டது. ஏப்.14-ல் எனது வாட்ச் பில், தமிழக அமைச்சர்களின் ரூ.2 லட்சம் கோடி சொத்துப் பட்டியலை வெளியிடுவேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x