Published : 11 Apr 2014 11:29 AM
Last Updated : 11 Apr 2014 11:29 AM

பொதுத்தேர்வுகள் முடிந்ததால் ஓங்கி ஒலிக்கும் ஒலிபெருக்கி பிரச்சாரம்: வாக்குறுதி முழக்கத்துடன் வலம்வரும் ஆட்டோக்கள்

தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்துவிட்டதால், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் ஒலிபெருக்கிகள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 24-ம் தேதி நடை பெறுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து அரசியல் கட்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டன. வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியதும் பிரச்சாரம் சற்று விறுவிறுப்பானது.

பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்ததால் ஒலிபெருக்கி பிரச்சாரம் வேண்டாம் என்று அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தியதால், ஆங்காங்கே தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டமும், தெருமுனைக் கூட்டமும் நடந்தது. அங்கு சில மணி நேரம் மட்டும் ஸ்பீக்கர்கள் அலறின. வேட்பாளர்கள் திறந்த ஜீப்களில் வாக்கு சேகரித்து வந்தனர்.

இந்த நிலையில், மார்ச் 25-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுற்றது. கடந்த 9-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்தது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான தேர்வும் முடிந்து விடுமுறையும் விடப்பட்டுவிட்டது. அதனால் தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக நகரின் வீதிகளில் கட்சிக் கொடிகளுடன் வலம்வரும் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

கட்சி கொள்கை விளக்கப் பாடல்கள் நாலாபக்கமும் ஒலிக்கின்றன. பதிவு செய்யப் பட்ட வேட்பாளர்களின் வாக்குறுதிக ளும், கட்சித் தலைவரின் பேச்சும் ஒலிபெருக்கியில் முழங்குகின்றன. “இப்பத்தான் தேர்தல் மாதிரி இருக்கு” என்று பொதுமக்கள் பேசிக்கொள்வதை காண முடிகிறது.

வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதும் விறுவிறுப்படைந் துள்ளது. 9-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டு மல்லாமல் சுயேச்சை வேட் பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x