Published : 06 Sep 2017 09:11 AM
Last Updated : 06 Sep 2017 09:11 AM
புதினா சட்னி கேள்விப்பட்டிருக்கிறோம். ‘புட் சட்னி’யைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 'put chatney' என்று இணையத்தைத் தட்டுங்கள்... கொட்டிக்கிடக்கின்றன ஆன் லைன் சேனல் வீடியோக்கள்.
கதையம்சம், காட்சி அமைப்பு தொடங்கி, பின்னணி இசை வரை ஒரு நல்ல திரைப்படத்தின் தரத்துக்கு இணையாக கலக்குகின்றன இந்த வீடியோக்கள். குபீர் சிரிப்பை வரவழைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கின்றன பல வீடியோக்கள்.
திரைப்படத் துறை தொடங்கி அரசியல் வரைக்கும் சகட்டுமேனிக்கு கலாய்த்திருக்கிறார்கள், அதுவும் ரசிக்கும்படியாக!
‘புட் சட்னி’ குழு
ராஜ்மோகன், ராஜீவ், அஸ்வின், பாலா, மாரி, அருண் கவுசிக், அருண்குமார், ஹரிஹரன் ஆகியோர்தான் ‘புட் சட்னி’ குழுவினர்.
‘புட் சட்னி’ குறித்து நடிகரும் எழுத்தாளருமான ராஜ்மோகனிடம் பேசினோம்... “ஒரு படத்தில் ஆங்கிலம் தெரியாத வடிவேலு, ‘சிங் இன் தி ரெய்ன்...’ என்றும் ‘புட் சட்னி’ என்றும் பந்தா பண்ணுவார். அப்போது எங்கள் தலைமையகத்திலிருந்தும் புதிய சேனலுக்கான பெயரைக் கேட்டு, அடிக்கடி ‘புட் நேம்’ என்று மெயில் வரும். உடனே ‘புட் சட்னி’ என்று பெயர் வைத்துவிட்டோம். அதுவே பிரபலமாகிவிட்டது.
இதுவரை 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் செய்துவிட்டோம். கதையம்சம், காட்சி அமைப்பு, பின்னணி இசை என அனைத்திலும் ஒரு நல்ல திரைப்படத்தின் தரத்துக்கு இணையாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுகிறோம். வெளிநாடுகளில் இவை மிகவும் பிரபலம். இங்கே இப்போது தான் இந்தத் துறை வளர்ந்துவருகிறது...” என்கிறார்.
உண்மைதான்! தனக்கென ஒரு குறிப்பிட்ட ரசிகர் வட்டாரத்தை தக்க வைத்திருக்கின்றன இந்த வீடியோக்கள். குறிப்பாக, ‘புட் சட்னி’ குழுவினரின் காவிரி தண்ணீர் பகிர்வு வீடியோ, தடகள வீராங்கனை சாந்திக்கு ஆதரவு கேட்கும் வீடியோ, இந்தி திணிப்பை திகில் பேய்ப் படமாகச் சித்தரிக்கும் வீடியோ, விவசாயிகள் வேலைநிறுத்தம் செய்யும் வீடியோ, அரியலூர் அனிதா தற்கொலை ஏன்? ஆகிய வீடியோக்கள் இணைய உலகில் மிகவும் பிரபலம். முதல்வர் ஆவது எப்படி? எம்.ஜி.ஆருக்கு கெளதம் வாசுதேவன் மேனன் கதை சொல்வது உள்ளிட்ட நகைச்சுவை வீடியோக்கள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கின்றன.
‘கற்றுக்கொண்டார்கள்... பற்றுக்கொண்டார்கள்’
வரும் செப். 16-ம் தேதி சென்னை சேத்துப்பட்டு, லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர். முத்தா கான்செர்ட் ஹாலில் நடக்கவிருக்கும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவில் ‘கற்றுக்கொண்டார்கள்... பற்றுக் கொண்டார்கள்’ என்கிற தலைப்பில் பேசுகிறார் ராஜ்மோகன்.
தமிழைத் தாய்மொழியாக இல்லாதவர்கள் தமிழைக் கற்றுக்கொண்டு, தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளைப் பற்றி விவரிக்கிறார் ராஜ்மோகன். அப்படி யாரைப் பற்றி எல்லாம் பேசுகிறார்…? அவரோடு கலகலவென யாரெல்லாம் உரையாடப் போகிறார்கள்…?
விழாவுக்கு வாருங்கள்… நேரில் சந்திப்போம்!
விவரங்களுக்கு: www.yaadhumthamizhe.com
பதிவுக்கு: SMS,THYT
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT