Published : 14 Sep 2017 09:01 AM
Last Updated : 14 Sep 2017 09:01 AM
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு, டெல்லியில் நடத்தி வரும் போராட்ட வடிவம் விவசாயிகளை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக பல்வேறு விவசாய சங்கத் தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 60 நாட்களாக அய்யாகண்ணு போராடி வருகிறார். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 41 நாட்கள் டெல்லியில் அவர் நடத்திய போராட்டம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ராகுல் காந்தி, முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை நேரில் சந்தித்தனர். ஆனால், இந்த முறை 60 நாட்களை கடந்தும் அய்யாகண்ணுவின் போராட்டத்தை யாரும் கண்டுகொள்ளாத நிலை உள்ளது.
திருவோடு ஏந்தி பிச்சை எடுப்பது, செருப்பால் அடித்துக் கொள்வது, நிர்வாணமாக ஓடுவது என்று பல்வேறு வடிவத்தில் போராட்டங்களை நடத்திய அய்யாகண்ணு அணியினர், இவற்றின் மூலம் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க முடியாததால் அடுத்த கட்டமாக மலத்தை உண்பது போலவும், இறந்த மனிதரின் கறியை உண்பது போலவும் போராட்டங்கள் நடத்துவது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும், ‘தி இந்து’விடம் கூறிய கருத்துகள் வருமாறு:
வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்:
டெல்லியில் அய்யாகண்ணு தலைமையில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் மிகுந்த கவலையையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது. நான் ஏராளமான விவசாயிகள் போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன். இதுபோன்ற போராட்டத்தை யாரும் நடத்தியதில்லை. விவசாயிகளின் போராட்டம் கண்ணியத்துடனும் போர்க்குணம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். விவசாயிகளுடைய சுயமரியாதையை பாதிக்கின்ற அளவில் நடக்கும் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன்:
அய்யாகண்ணுவின் நோக்கம் பாராட்டுக்குரியது. ஆனால், அவரது போராட்டத்தின் சில நடைமுறைகளை ஏற்க முடியாது. டெல்லியில் தனித்துப் போராடுவதால் தீர்வு ஏற்படாது. அனைத்து விவசாய அமைப்புகளும் ஒருங்கிணைந்து தமிழகத்தில் போராட வேண்டும். மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, ரயில் மறியல் போன்ற போராட்டங்களை நடத்த வேண்டும்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன்:
டெல்லியில் அய்யாகண்ணு நடத்தும் போராட்டம் தமிழக விவசாயிகளை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டங்கள் அவசியம். அதற்காக தன்மானத்தை இழக்கும் விதமாக போராட்டத்தை மேற்கொள்வது சரியல்ல. தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு தேர்தலின்போது தக்க பாடம் புகட்டவேண்டும்.
தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளர் செ.நல்லசாமி:
போராட்டத்தின் நோக்கம் நியாயமானதாக இருந்தாலும் அதன் வடிவம் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருந்தால் அந்த போராட்டம் தோல்வி அடையும். இதற்கு அய்யாகண்ணுவின் போராட்டமே உதாரணம். பிறருக்கு உணவளிக்கும் விவசாயி யாரிடமும் யாசகம் கேட்கமாட்டான். அய்யாகண்ணுவின் போராட்டம் சுயமரியாதையையும் தன்மானத்தையும் இழந்த போராட்டமாக மாறிவிட்டது. எனவே, போராட்டத்தை அவர் முடித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
விவசாய சங்கத் தலைவர்களின் விமர்சனம் குறித்து அய்யாகண்ணுவிடம் கேட்டபோது, “விவசாயிகள் கோவணத்துடன்தான் வயலில் வேலை செய்கிறார்கள். அதனால்தான் நாங்களும் கோவணம் அணிந்து போராடுகிறோம். தமிழகத்தில் போராடுவதால் எந்த பயனும் கிடைக்காது. எங்களுடைய போராட்டத்துக்கு ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம் என பல்வேறு மாநில விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது 543 விவசாயிகளை கொண்டு விவசாயிகள் நாடாளுமன்றம் என்ற போராட்டத்தை நடத்த இருக்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT