Last Updated : 31 Aug, 2017 02:12 PM

 

Published : 31 Aug 2017 02:12 PM
Last Updated : 31 Aug 2017 02:12 PM

புளூவேல் விளையாட்டு குறித்த விழிப்புணர்வுக்கு சிறப்பு செல் அமைக்கப்படும்: மதுரை ஆட்சியர் தகவல்

புளூவேல் எனும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதால் மதுரையில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சிறப்பு செல் அமைக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்,

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே மொட்டமலை கலைஞர் நகரை சேர்ந்தவர் ஜெயமணி என்பவரது மகன் விக்னேஷ் (19). இவர் பசுமலையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணையில் விக்னேஷ் தனது இடது கையில் திமிங்கலத்தின் படம் வரைந்தும், புளூவேல் விளையாட்டு குறித்து காகிதத்திலும் எழுதி இருந்தது தெரியவந்தது. எனவே அவர் புளூவேல் எனப்படும் நீலத் திமிங்கல ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆஸ்டின்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மாணவரின் பிரேதத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார் ஆட்சியர் வீரராகவ ராவ். மாணவரின் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறியிருக்கிறார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "மாணவர் விக்னேஷ் புளூவேல் எனப்படும் நீலத் திமிங்கல ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்தில் விசாரணையையும் துவக்கியுள்ளனர். மாணவரின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இத்தகைய ஆன்லைன் விளையாட்டுக்கு இரையாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இருப்பினும், மாணவரின் மரணத்துக்கான காரணம் பிரேத பரிசோதனை முடிவுக்குப் பின்னரே உறுதியாகும்.

மாணவர் தற்கொலையையடுத்து புளூவேல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு செல் அமைக்கப்படும். இளைஞர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும். இத்தகைய ஆபத்தான விளையாட்டை உங்களுக்கு தெரிந்தவர்கள் விளையாடினால் நீங்கள் காவல்துறைக்கு புகார் தெரிவிக்கலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x