Published : 07 Mar 2023 05:31 PM
Last Updated : 07 Mar 2023 05:31 PM

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ: பிஹார் இளைஞரை கைது செய்த திருப்பூர் போலீஸ்

வட மாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வு.

திருப்பூர்: சமூக வலைதளத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வதந்தி பரப்பிய பிஹார் மாநில இளைஞரை திருப்பூர் மாநகர போலீஸார் இன்று கைது செய்தனர்.

வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குவதல் நடத்துவதாக வதந்தி பரப்பட்டது. இதையடுத்து பிஹார், ஜார்கண்ட் மாநிலத்தின் சார்பில் செயலர், ஆட்சியர் உள்ளிட்ட பிரதிநிதிகள் அடங்கிய குழு தமிழகம் வந்து கடந்த 3 நாட்களாக தொழிலாளர்களை நேரில் சந்தித்து, களத்தில் இருந்த உண்மைத்தன்மையை வீடியோவாக பதிவு செய்தனர்.

தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்பது உறுதியான நிலையில், வதந்தி செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தது. அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவின் பேரில் சைபர் கிரைம் ஆய்வாளர் சொர்ணவள்ளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சமூக வலைதளங்களை கண்காணித்து வந்தனர். ஃபேஸ்புக்கில் சிபிஎல் மீடியா என்ற கணக்கில் ரூபேஷ்குமார் என்பவர் போலியான வீடியோவை பதிவேற்றம் செய்து வதந்தியை பரப்பியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிந்தனர். அவர் பிஹார் மாநிலம் கிழக்கு சம்பாரன் மாவட்டம் ஜெயின்பூர் அருகே பன்கட்டி கிராமத்தைச் சேர்ந்த ரூபேஷ்குமார் (23) என்பது தெரியவந்தது. இவர் தெலங்கானா மாநிலம் வனபார்த்தி மாவட்டம் சின்னகுண்டப்பள்ளி மாவட்டத்தில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திருப்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண்-3-ல் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சென்னையில் தனிப்படை: திருப்பூர் மாவட்ட போலீஸார் கூறும்போது, ''திருப்பூர் மாவட்டத்தில் 3 வழக்குகள் உள்ளன. வதந்தி பரப்பிய ஒரு யூடியூப் தொடர்பாக, மாவட்ட போலீஸார் சென்னை வரை சென்றுள்ளனர். யாரும் கைது செய்யப்படவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x