Published : 07 Mar 2023 04:39 PM
Last Updated : 07 Mar 2023 04:39 PM
கிருஷ்ணகிரி: தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி அதிமுக என்பதை பழனிசாமி நிரூபித்திருக்கிறார் என கிருஷ்ணகிரியில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பெரியகோட்டப்பள்ளி கிராமத்தில் இன்று (7ம் தேதி) ரூ.30 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகளும், எம்சிபள்ளி கூட்ரோடு பஸ் நிறுத்தும் இடத்தில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்கூடம் அமைக்கப்படுகிறது. இப்பணிகளை வேப்பனப்பள்ளி எம்எல்ஏ-வும், அதிமுக துணை பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி, பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ''அண்ணாமலையின் நண்பர் அமர் பிரசாத் ரெட்டி, ஈரோடு இடைத் தேர்தல் பழனிச்சாமியால்தான் தோற்றது என குற்றம் சாட்டியுள்ளார். அது ஏற்புடையது அல்ல. தவறான கருத்து. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் கட்சி நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் ரூ.400 கோடி திமுக செலவு செய்திருந்தாலும் கூட 44 ஆயிரம் வாக்குகளை நாங்கள் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் உண்மையான வெற்றி அதிமுகவிற்குதான். இந்த தேர்தலில் வாயிலான தமிழகத்தின் உண்மையான எதிர்கட்சி அதிமுக என்பதையும் பழனிசாமி நிரூபித்திருக்கிறார்.
வட மாநில தொழிலாளர்கள் இங்கே வேலை தேடி வருகிறார்கள். இங்கே தொழில் செய்பவர்கள் அவர்களுக்கு வேலை கொடுத்து நல்ல சம்பளத்தையும் கொடுக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை வந்தாரை வாழவைக்கும் ஒரு மண். வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வருபவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக் கூடிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது என பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.
இன்றைய ஆட்சியாளர்கள் நீட் தேர்வை ரத்து செய்கிறேன் என்று சொல்லி மாணவர்களை ஒரு பக்கம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் ஒரு பக்கம் அதை சொல்லிக் கொள்ளுங்கள். நீதிமன்றத்துக்கு செல்லுங்கள். அதே நேரத்தில், ஆண்டாண்டு நடைபெறும் நீட் தேர்வுக்காக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். அப்படி பயிற்சி அளித்தால் தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக அரசுப் பள்ளி மாணவர்களும் வருவார்கள். அதற்கு இந்த அரசு வேகப்படுத்த வேண்டும். அவ்வாறு அல்லாமல் நீட் ரத்து என்று சொல்லிக் கொண்டு மாணவர்களை ஏமாற்றக் கூடாது என்பதை சொல்லிக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி உள்ளிட்ட பலர் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT