Published : 07 Mar 2023 03:31 PM
Last Updated : 07 Mar 2023 03:31 PM

இரு மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கையால் வீடியோக்கள் போலி என்பதை தொழிலாளர்கள் தெரிந்துகொண்டனர்: பிஹார் அரசுக் குழு

பிஹார் குழு | கோப்புப்படம்

சென்னை: "சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் பிஹார் மாநிலத் தொழிலாளர்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், தமிழ்நாடு அரசு மற்றும் பிஹார் மாநில அரசும் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் அந்த வீடியோ போலியானது என்பதை பிஹார் தொழிலாளர்கள் தெரிந்துகொண்டனர்" என்று பிஹார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன் கூறியுள்ளார்.

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்புவை, பிஹார் மாநிலக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.இந்த சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன் கூறியது: "நாங்கள் சனிக்கிழமையன்று தமிழகத்திற்கு வந்தோம். முதலில் காவல் துறை தலைமை அலுவலகத்தில், மூத்த அதிகாரிகளிடம் பேசினோம். அதன்பிறகு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர், தொழிலாளர் துறை ஆணையர், பொதுத்துறை செயலர், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிஹார் அசோசியேஷன் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துபேசினோம்.

பின்னர், தமிழக அரசின் உதவியுடன் நாங்கள் ஞாயிறன்று திருப்பூர் சென்றோம். மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம். தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுடனும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம்.

குறிப்பாக, தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அவர்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர். அதன்பிறகு, திருப்பூரில் 3 இடங்களில் பிஹாரில் இருந்து வந்து அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டறிந்தோம். அவர்களிடம் நேரடியாக பேசினோம். அவர்கள் என்ன உணர்கின்றனர், இந்த விவகாரத்தை எப்படி பார்க்கின்றனர், அவர்களுக்கு என்ன தகவல் கிடைத்தது என்பது குறித்து விசாரித்தோம்.

திங்களன்று, கோவையில் 3 இடங்களில் பிஹாரில் இருந்து வந்து அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் பேசி அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்தோம். அவர்களுடன் விரிவாக விவாதித்தோம். அப்போது, அவர்களின் அனுமதியோடு அவர்களின் செல்போன்களுக்கு என்னென்ன மாதிரியான மெசேஜ்கள் வந்திருக்கிறது என்பதையும் பார்த்தோம். திருப்பூரைப் போலவே, அதிகாரிகள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தோம். இன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிளைச் சந்தித்தோம்.

இந்த வதந்தி பரவிய உடனே எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தலைமைச் செயலாளர் அதிகாரிகள் மூலம் எங்களுக்கு தெரிவித்தார். அதற்கு முன்னதாக, நாங்களே தெரிந்துகொண்டோம். சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட வீடியோக்கள், ஜோத்பூரில் நடந்த ஒரு கொலைச்சம்பவம் குறித்த வீடியோ, ஹைதராபாத்தில் நடந்த சம்பவம், கோவையில் நடந்த சம்பவம் என்று 3 வீடியோக்கள். அந்த கோவை வீடியோவும் பிஹார் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டது அல்ல.

இதுபோன்ற சம்பவங்களையெல்லாம், பிஹார் தொழிலாளர்களுக்கு நடந்தததாகவும் வந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். முன்னதாக அந்த வீடியோக்களை எல்லாம் பார்த்து அவர்களிடையே ஒருவித அச்சம் பரவத் தொடங்கியிருந்தது. தமிழக அரசும், பிஹார் அரசும் தொடர்ந்து எடுத்த நடவடிக்கையின் காரணமாக அது போலி என்பதை அவர்கள் தெரிந்துகொண்டனர். இந்த விவகாரத்தில் உதவிகரமாக இருந்த ஊடகங்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x