Published : 07 Mar 2023 03:07 PM
Last Updated : 07 Mar 2023 03:07 PM

மின் இணைப்புகளை ஒருவர் பெயரிலே மாற்றச் சொல்வதால் எளிய மக்கள் பாதிப்பு: சுட்டிக்காட்டும் கம்யூ. நிர்வாகிகள்

கும்பகோணம்: “ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வரக்கூடியவர்களின் மின் இணைப்புகள் அனைத்தும் ஒருவர் பெயரிலேயே மாற்ற வேண்டும்” என்ற தமிழக மின்சார ஆணையத்தின் அறிவிப்பைத் திரும்ப பெற வேண்டும் என்று கம்யூனிஸ்ட்யின் கட்சி கும்பகோணம் நிர்வாகிகள், வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் கூறும்போது, “மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளபடி ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வரக்கூடிய மின் இணைப்புகள் அனைத்தும் ஒருவர் பெயரிலேயே மாற்ற வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணைய அறிவித்துள்ளது. இது நடுத்தர மக்கள் தலையில் மேலும் மின் கட்டண சுமையை வைப்பதாகும். இதனால் சாதாரணமாக 500 யூனிட்டுக்களுக்கு மேல் பல வீட்டில் உள்ளவர்களுக்கு கட்டணம் செலுத்தக் கூடிய அபாயம் இருக்கின்றது. இலவச மின்சாரமும் பறிபோகும். ஒரு யூனிட்டிற்கு ரூ.10-க்கு மேல் செலுத்த வேண்டிய ஒரு மோசமான நிலை ஏற்படும்.

இந்த அறிவிப்பால், ஏற்கெனவே கடுமையான விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு இருக்கக் கூடிய நடுத்தர வர்க்க மக்கள், விவசாயிகள் தலையில் பேரிடியாக அமைந்துள்ளது. எனவே, மின்சார வாரியம், இந்த அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, “மின் இணைப்புகளை ஆதார் அட்டையுடன் இணைப்பதைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மின் கணக்கிட்டு முறை என்பது மீட்டர் ரீடிங் பொறுத்து அமைந்துள்ளது. குறிப்பிட்ட அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தினால் குறிப்பிட்ட தொகை வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில், அனைத்து மின் இணைப்புகளையும் ஒன்றாக இணைக்கும் போது மீட்டர் ரீடிங் என்பது நிச்சயமாக அதிகரிக்கும், அப்போது மின் கட்டணம் உறுதியாக உயரும். இதனால் ஏழை - எளிய மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், சிறு குறு தொழிற்சாலைகள் விவசாயிகளும் பாதிக்கப்படக்கூடும். எனவே, இந்த அனைத்து மின் இணைப்புகளையும் ஒன்றாக இணைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் வணிகர்கள் சங்கத் தலைவர் கே.எஸ்.சேகர் கூறும்போது, “மின்சார துறையினர் அறிவிப்பால் நடுத்தர மக்கள் சிரமத்துக்குள்ளாவார்கள். குடியிருப்புகளில் உள்ள மீட்டர்களை ஒன்றிணைத்தால், கட்டணம் உயர்வதோடு, இலவச மின்சாரமும் நிறுத்தப்படும். அவர்களுக்குள் கட்டணம் செலுத்துவது குறித்து குழப்பம் ஏற்படும். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மக்களுக்குக் கஷ்டத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறார்கள்” என கூறியிருக்கிறார்.

ஆவூரைச் சேர்ந்த விவசாயி பால.செந்தில்குமரன் பேசும்போது, “இலவச மின்சாரத்தை நிறுத்தவதற்காக தான் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்கள். ரீடிங் அதிகமானால் மின் கட்டணம் பல மடங்கு உயரும். ஏற்கெனவே விலைவாசி உயர்வால் திண்டாடும் மக்களுக்க இந்த அறிவிப்பு மேலும் சுமைதான். இந்தத் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் திடீரென அறிவித்ததால் மக்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் குழப்பம் ஏற்படும். இந்த திட்டத்தை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x