Published : 07 Mar 2023 02:12 PM
Last Updated : 07 Mar 2023 02:12 PM
சென்னை: மருந்துகளை எடுத்துக்கொள்வதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து மக்கள் மருந்தகங்கள், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் மருந்தக தினம் ஆண்டுதோறும் மார்ச் 7ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவ பயிற்சி மையத்தில், மத்திய அரசின் சார்பில் செயல்பட்டு வரும் மக்கள் மருந்தக தின நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மக்கள் மருந்தக மருந்தாளுநர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "மக்களுக்கு தேவையான ஜெனரிக் மருந்துகள் தரமான மருந்தாகவும், மலிவான விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மக்கள் மருந்தகம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 7ம் தேதி மக்கள் மருந்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 37 மாநிலங்களில் மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வந்தாலும், தமிழகம்தான் மக்கள் மருந்தக செயல்பாட்டில் முதல் மாநிலமாக இருந்து வருகிறது. சென்னையில் மட்டும் 72 இடங்களில் மக்கள் மருந்தகங்கள் உள்ளன.
மருத்துவர்களின் பரிந்துரை கடிதங்கள் இல்லாமல் மருந்துகளை தருவது ஆபத்தானது. மருந்து தரும் ஒவ்வொரு முறையும் அந்த மருந்து யாருக்கு தரப்படுகிறது, அந்த மருந்தை உட்கொள்வதற்கு அவர் தகுதியானவரா என்பதை ஆராய வேண்டியது முக்கியம். மருந்துகள் எந்த வேலையில் எடுத்துக்கொள்ள வேண்டுமோ, அந்த வேலையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் உட்கொள்ளக்கூடாது. மக்கள் மருந்தகங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்க இவை குறித்து அவை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT