Published : 07 Mar 2023 01:55 PM
Last Updated : 07 Mar 2023 01:55 PM

பாஜகவுக்கான பி டீம் அரசியலை சிராக் பாஸ்வான் தமிழகத்தில் செய்ய வேண்டாம்: ஆ.ராசா

சிராக் பாஸ்வான் மற்றும் ஆ.ராஜா

சென்னை: பாஜகவுக்கான பி டீம் அரசியலை சிராக் பாஸ்வான் தமிழகத்தில் செய்ய வேண்டாம் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிஹார் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பது வேதனை தருவதாக, சென்னை வந்த லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்தார். போலி வீடியோ பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அவர் மனு அளித்தார். இந்நிலையில் சிராக் பாஸ்வானுக்கு பதில் அளித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முற்போக்கு அரசுகள் அமைந்தாலும் சமூகத்தில் வேரூன்றிவிட்ட பழமைவாதத்தாலும் புரட்டுகளாலும் போதிய கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்காமல் வடமாநில சகோதர சகோதரிகள் தவிக்கின்றனர்.

தமிழகத்தில் திராவிட இயக்கம் உருவாக்கிய மாற்றத்தை, மண்டல் எழுச்சி ஏற்படுத்திவிடக் கூடாது என இன்னமும் சில பிற்போக்குச் சக்திகள் முயன்று வருகின்றன. இதனால், வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை தேடியும் புதுவாழ்வு தேடியும் தமிழகத்திற்கு வருகின்றனர். தமிழகத்தில் பணிபுரியும் அவர்களது நிம்மதியையும் கெடுக்கும் வகையில் சுயநல அவதூறு அரசியலை பா.ஜ.க. செய்வதும், அதற்கு மறைந்த ராம் விலாஸ் பாஸ்வான் மகனும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் துணை போவதும் கடும் கண்டனத்திற்குரியது.

பிஹாரில் இருந்து தமிழகம் வந்த அரசு குழு, இங்கு பணிபுரியும் வேற்று மாநிலத் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை என்பதை நேரில் கண்டு உறுதிசெய்திருக்கிறது. போலி செய்தியை திட்டமிட்டு பரப்பியவர்கள் மீது, தமிழக காவல்துறையும் பீகார் மாநிலக் காவல்துறையும் வழக்குகள் பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் தாங்கள் காலம்காலமாகச் செய்துவந்த பொய்களைப் பரப்பும் தொழில் மக்களிடையே அம்பலப்பட்டு நிற்பதால், சிராக் பாஸ்வானை துணைக்கு அழைத்து ஆறுதல் தேடியிருக்கிறார்கள்.

எதிர்வரும் நாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வலிமையான கூட்டணியைக் கட்டமைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்து, அதற்கு அச்சாரமாகத் தனது 70-வது பிறந்தநாள் விழா மேடையையே களமாக மாற்றியதில், கும்பி எரிய இந்தப் பொய்ப் பரப்புரை மேற்கொள்ளப்படுவதை அறியாதவர்கள் அல்ல மக்கள். எனவே, சிராக் பாஸ்வான் அவர்களை வைத்து நடத்தும் நாடகங்களையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடையே பாஜக-வின் விஷமத்தனப் பிரச்சாரத்திற்குத் துணை போக வேண்டாம் என ராம் விலாஸ் பாஸ்வான், மகனுக்கு எச்சரிக்கையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சிராக் பாஸ்வானுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். பாஜக-வுக்கான பி டீம் அரசியலை அவர் பீகாரிலேயே செய்யட்டும். அத்தகைய நயவஞ்சக எண்ணத்துடன் தமிழகம் வர வேண்டாம். எங்கள் தலைவர் முன்வைக்கும் திராவிட மாடல் வழியாக 2024-இல் மத்தியில் மதச்சார்பற்ற - முற்போக்குச் சக்திகளின் அரசு அமையும். வடமாநிலங்களில் பரவி வரும் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய சிந்தனையும், அது அம்மாநிலத்தில் வாழும் நமது சகோதர, சகோதரிகளிடையே ஏற்படுத்தி வரும் அரசியல் விழிப்புணர்வும் அதற்குக் கட்டியம் கூறுகின்றன. அப்போது பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் சேர்ந்தே விடியும்! அந்த விடியலில் பொய்களும் பொய்களுக்குத் துணைப் போகும் போலிகளும் மக்களால் தண்டிக்கப்பட்டிருப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x