Published : 07 Mar 2023 01:27 PM
Last Updated : 07 Mar 2023 01:27 PM
சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சர்வதேச மகளிர் தினம் நாளை (மார்ச்.8) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: இன்றைய 21 ஆம் நூற்றாண்டு கணினி யுகத்தில் பெண்கள் எல்லா நிலைகளிலும் முன்னேறிப் பாய்ந்து செல்வதைக் கண்டு அகிலம் வியக்கின்றது. தமிழ் இனத்தின் வரலாற்றில் பெண்கள் உன்னதமான மதிப்பைப் பெற்றிருக்கிறார்கள். பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் மகளிருக்கு, உலக மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: ஈடு இணையற்ற சிறப்புகளைக் கொண்ட மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8ம் தேதியான நாளை கொண்டாடப்படும் நிலையில், வீட்டை ஆள்வதில் தொடங்கி நாட்டை ஆள்வது வரை அனைத்திலும் மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்க வேண்டும். அத்தகைய கனவு சமுதாயத்தை உருவாக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற உலக மகளிர் நாளான இந்த நன்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் மார்ச் 8 அன்று மகளிர் நலன் காக்கப்படும் வகையில் மனித இனம் செயல்பட வேண்டும். உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் மகளிருக்கு எதிரான குற்றச்செயல்கள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். பெண் குடும்பத்தை வழி நடத்தி செல்வதால் அக்குடும்ப உறுப்பினர்கள் சமுதாயத்தில் நல்வாழ்க்கை வாழ முடிகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழ் பெண்கள் உட்பட அனைத்து பெண்களும் மன நிம்மதியாக, மகிழ்ச்சியாக, குடும்பத்திற்காக, நாட்டிற்காக தாங்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பான பணியை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள இறைவன் துணை நிற்க வேண்டி, மகளிர் தின நல்வாழ்த்துகளை த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்: பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறிப்பாக பணியிடங்களில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. நிர்பயா நினைவாக நிறைவேற்றப்பட்ட பணியிட பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் அமலாக்கப்படுவதில்லை என்ற நிலையில் நடப்பாண்டு பெண்கள் தினத்தில், பாலின வேறுபாடுகளையும், அடக்குமுறைகளையும் ஆதரித்து வரும் வகுப்புவாத சக்திகளின் கரங்களில் சிக்கியுள்ள நாட்டின் அதிகாரத்தை மீட்கும் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து, முன்னேறுவோம் என உறுதி ஏற்று, பெண்கள் அனைவருக்கும் சிபிஐ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: அன்பும், அறமும் மனிதர்களிடம் தழைத்தோங்க உயிர் கொடுக்கும் பெருமைமிகு தாய்மையை எந்த நாளும் போற்றுவோம் என்ற செய்தியுடன் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அதேநேரத்தில் அவர்களைச் சுதந்திரமாக செயல்படவும் அனுமதிக்க வேண்டும் எனவும், பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படாமல் அவர்களைப் பாதுகாப்பதற்கு இந்த நாளில் உறுதி ஏற்போம். மேலும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறுவதே மகளிரை அடிமைப்படுத்தும் செயல் தான். ஆண்கள் தான் சாதிக்கப் பிறந்தவர்கள். பெண்கள் அவர்களுக்கு உதவுவதற்காக பிறந்தவர்கள் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு தான் இது. பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அனைத்துத் துறைகளிலும் சாதிப்பார்கள். அதற்கு அண்மைக்காலங்களில் அவர்கள் படைத்துள்ள சாதனைகள் தான் சான்று. இதை உணர்ந்து பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க அனுமதிக்க வேண்டும்; அவர்களுக்கு அனைத்து வழிகளிலும் ஆண்கள் துணை நிற்க வேண்டும் என்ற உறுதிமொழியை மகளிர் நாளான இந்த நாளில் நாம் அனைவரும் ஏற்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT