Published : 07 Mar 2023 12:42 PM
Last Updated : 07 Mar 2023 12:42 PM
சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் தொமுச உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளன.
சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவது தொடர்பான அறிவுரைகளை வழங்க ஆலோசகர் பணியிடத்துக்கான டெண்டர் அறிவிப்பை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு திமுகவின் தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த முடிவைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் அனைத்து மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் நேற்று (பிப்.6) ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சென்னையில் நேற்று (பிப்.6) சிஐடியு, தொமுச நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அதில், சென்னை மாநகருக்குள் தனியார் பேருந்துகளை இயக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வலியுறுத்தியும், போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசே வழங்க வலியுறுத்தியும் முதல்வருக்கு கடிதம் அனுப்பவும், முதல்வரை சந்தித்துப் பேசவும் முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்து தொமுச, சிஐடியு உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் சார்பில், முதல்வருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், டிடிஎஸ்எப், எம்எல்எப், ஏஏஎல்எல்எப், டிடபிள்யூயு உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT