Published : 07 Mar 2023 11:34 AM
Last Updated : 07 Mar 2023 11:34 AM
சென்னை: என்எல்சி-க்காக இனி நிலம் கையகப்படுத்தப் போவதில்லை என்ற அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் பதில் அப்பட்டமான பொய் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "என்எல்சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு சுரங்கங்கள் அமைப்பதற்காக கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை கடலூர் மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தி பறித்திருக்கும் நிலையில், தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும், இனி நிலங்களை கையகப்படுத்தப் போவதில்லை என்றும் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
இது அப்பட்டமான பொய்யாகும். என்எல்சிக்கு நிலம் எடுக்க கடலூர் மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ள முடியாத மாவட்ட நிர்வாகம், அனைத்து நடவடிக்கைகளையும் திரைமறைவில் செய்து வருகிறது. நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலையோ, கூட்டுறவு சங்கத்தின் மூலமான வேலையோ வழங்க என்எல்சி தயாராக இல்லை எனும் நிலையில், தினக்கூலி வேலை வழங்கி மக்களை மாவட்ட நிர்வாகம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
அதற்காக ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் நேற்று வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறவிருந்த நிலையில், அது பற்றி நீதி கேட்பதற்காக பாமக சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் கடலூர் மாவட்ட பாமக செயலாளர்கள் தலைமையில் ஏராளமானவர்கள் அங்கு சென்றனர். இதையறிந்த அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரகசியமாக செய்து முடித்தனர்.
அங்கும் சென்ற பாமக குழுவினர், என்எல்சிக்கு நிலம் எடுக்கும் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் அனைத்தையும் திரைமறைவில் செய்வது ஏன்? என்று வினா எழுப்பினார்கள். எந்த வினாவிற்கும் அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் நேரடியாக விடையளிக்கவில்லை. வெளியில் செய்தியாளர்களிடம் பேசும் போது மட்டும், என்எல்சிக்காக 2500 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தியிருப்பதாகவும், இனி நிலம் கையகப் படுத்தப் போவதில்லை என்றும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். அமைச்சரின் பதில் அப்பட்டமான பொய்; மக்களை ஏமாற்றும் வேலை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை.
மூன்றாவது சுரங்கத்திற்காக கொளப்பாக்கம், அரசகுழி, கோ.ஆதனூர், பெருவரப்பூர், பெருந்துறை, ஓட்டிமேடு, கோட்டி முளை, சிறுவரப்பூர், க.புத்தூர், சாத்தபாடி, தர்மநல்லூர் உள்ளிட்ட 26 கிராமங்களில் உள்ள 4850 ஹெக்டேர், அதாவது 12,125 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த கடந்த 2018ம் ஆண்டிலேயே என்எல்சியும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்தனவா, இல்லையா? அதைக் கண்டித்து எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்ட பிறகுதான் அத்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த இதே பன்னீர் செல்வம் நிலம் எடுப்பதை எதிர்த்து 2017ம் ஆண்டு பிப்ரவரி 7ம் நாள் கம்மாபுரத்தில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாநிலை போராட்டம் நடத்தினாரா, இல்லையா? அப்போது ‘‘மூன்றாவது சுரங்கத்திற்கு நிலம் கொடுக்க மக்கள் தயாராக இல்லை; அதனால் நிலம் எடுக்க அனுமதிக்க மாட்டோம்’’ என்று முழங்கினாரா, இல்லையா? அப்போது அப்படி முழங்கிவிட்டு, இப்போது என்எல்சியின் முகவராக மாறி, நிலம் எடுக்கும் திட்டமில்லை என்று கூறுவது பொய் இல்லையா?
கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியை சுற்றியுள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய 3 வட்டங்களில் உள்ள புத்தூர், ஆட்கொண்டநத்தம், மோவூர், ஓமம்புலியூர், தவர்த்தாம்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களில் மிக அதிக அளவில் உள்ள நிலக்கரி வளத்தை தோண்டி எடுப்பதற்கான வீராணம் நிலக்கரி சுரங்கத்திற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இன்றைய தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறதா, இல்லையா? இனி நிலமே எடுக்கப்போவதில்லை என்றால் எதற்காக இந்த ஆய்வை அனுமதிக்க வேண்டும்?
என்எல்சி நிறுவனத்திற்காக 1985ம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட 10,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் இன்று வரை பயன்படுத்தப்படாமல் உள்ளன. இந்த நிலத்திலிருந்து இன்னும் 40 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரியை எடுக்க முடியும். அவ்வாறு இருக்கும் போது உழைக்கும் மக்களின் நிலங்களை கையகப்படுத்த மீண்டும், மீண்டும் அமைச்சரும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் துடிப்பது ஏன்? எந்த வகையில் பார்த்தாலும் என்எல்சிக்கு நிலம் தேவையில்லை.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் பணமாக்குதல் (National Monetisation Pipeline) திட்டத்தின் கீழ் என்எல்சி நிறுவனம், அடுத்த இரு ஆண்டுகளில், அதாவது 2025ம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்பனை செய்யப் படவிருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு ஆண்டுகளில் தனியாருக்கு விற்கப்படவிருக்கும் என்எல்சிக்காக ஏன் மக்களை மிரட்டி நிலங்களை பறிக்க வேண்டும்?,
தமிழகத்தில் 2040ம் ஆண்டுக்குள் நிகரச் சுழிய கரிம உமிழ்வு (Net Zero Carbon Emissions) நிலை ஏற்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். அப்படியானால், என்எல்சி சுரங்கங்கள் விரிவுபடுத்தப் படக்கூடாது; மாறாக படிப்படியாக மூடப்பட வேண்டும். மூடப்பட வேண்டிய நிறுவனத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்துவது தான் மக்கள் நலன் காக்கும் அரசின் பணியா? என்எல்சி நிறுவனத்தால் கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
1956ம் ஆண்டில் தொடங்கி இன்று வரை 37,256 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை என்எல்சி பறித்துள்ளது. அந்த நிலங்களை வழங்கிய மக்களுக்கு இன்று வரை உரிய இழப்பீடும் வேலை வாய்ப்பும் வழங்கப்படவில்லை. அண்மையில் 299 பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. இப்போதும் கூட ஒருவருக்கு கூட நிரந்தரப் பணி வழங்க முடியாது; என்எல்சி இன்கோசர்வ் கூட்டுறவு சங்க உறுப்பினராகக் கூட எவரையும் சேர்க்க முடியாது என்று என்எல்சி கூறி விட்டது. இப்போது அமைச்சரால் வழங்கப்பட்ட பணி ஆணை என்பது தினக்கூலி பணிக்கானது மட்டுமே.
அடுத்த 3 மாதங்களில் ஒப்பந்தக்காரர்கள் நினைத்தால், இவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். இப்படிப்பட்ட ஒன்றுக்கும் உதவாத ஆணையை வழங்கித் தான் மக்களை அமைச்சர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். மற்றொருபுறம் என்எல்சியால் கடலூர் மாவட்டத்திற்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு காலத்தில் 8 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இப்போது 1000 அடிக்கும் கீழே சென்று விட்டது.
வெள்ளக் காலங்களில் என்எல்சி நிறுவனம் எந்த சமூகப் பொறுப்பும் இல்லாமல் அதன் சுரங்கங்களில் உள்ள நீரை ராட்சத குழாய்கள் மூலம் மிகப்பெரிய அளவில் வெளியேற்றுகிறது. அதனால், வெள்ளம் அதிகரித்து, மிக அதிக அளவில் உயிர் சேதமும், பயிர் சேதமும் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிறுவனத்திற்கு, சொந்த வேளாண் மக்களுக்கு துரோகம் செய்து விட்டு தமிழக அரசு நிலம் எடுத்துத் தர வேண்டுமா? கடலூர் மாவட்ட மக்களை மிரட்டி நிலங்களை பறித்து விட்டதாக கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்எல்சி நிறுவனமும் நினைத்துக் கொண்டிருக்கலாம்.
ஆனால், அவர்களால் அங்கு எதையும் செய்ய முடியாது. உழவர்களுக்கு சொந்தமான அந்த நிலங்கள் பசுமை பூமியாகவே தொடர வேண்டும்; அங்கு விவசாயம் மட்டுமே நீடிக்க வேண்டும். மாறாக, சுற்றுச்சூழலை கெடுக்கும் கருமை பூமியாக மாற்ற பாமக அனுமதிக்காது. அதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய பாமக தயாராக உள்ளது. கடலூர் மாவட்ட மக்களின் நலனில் தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால், ஜெயங் கொண்டத்தில் நிலக்கரி சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் எவ்வாறு மீண்டும் உழவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனவோ, அதேபோல் இப்போது கையகப்படுத்தப் பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வராத நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடமே கடலூர் மாவட்ட நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தை பாழ்படுத்தி வரும் என்.எல்.சி நிறுவனம் கடலூர் மாவட்டத்திலிருந்து வெளியேற
வேண்டும். உழவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் அவர்களிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த இலக்குகளை எட்டும் வரை பாமக எந்த சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடும்." என்று அன்புமணி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT