Published : 07 Mar 2023 11:14 AM
Last Updated : 07 Mar 2023 11:14 AM

''திமுக ஆட்சியை அகற்ற சதி'' - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு 

முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்

நாகர்கோவில்: திமுக ஆட்சியை அகற்ற சதி நடப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

நாகர்கோவிலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "அண்ணா மற்றும் கருணாநிதியின் லட்சியங்களை நிறைவேற்ற பாடுபட வேண்டும். ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் லட்சியங்களை நிறைவேற்ற பாடுபட வேண்டும்.

நம்மை பாராட்டக் கூடியவர்கள், வாழ்த்தக் கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர். தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலத்தவர்கள், அந்த மாநிலங்களின் தலைவர்கள் நம்மை வாழ்த்திக் கொண்டு உள்ளனர். கடல் கடந்து வாழ்பவர்களும் ஆட்சியின் சாதனைகளைப் பார்த்து பாராட்டி கொண்டுள்ளனர்.

ஆனால், நாட்டை பிளவு படுத்த வேண்டும் என்று உலவிக் கொண்டு இருக்கும் சிலர், இந்த ஆட்சி திராவிட மாடல் என்று சொல்லி தமிழக மக்களை கவரக் கூடிய வகையில் ஆட்சி செய்து கொண்டு உள்ளதால், தொடர்ந்து ஆட்சியை விட்டால், நம்முடைய பிழைப்பு என்ன ஆவது என்று நினைத்து புழுதி வாரி தூற்றிக் கொண்டு உள்ளார்கள். இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டிக் கொண்டு உள்ளார்கள்.

கலவரத்தை ஏற்படுத்தலாமா, ஜாதிக் கலவரத்தைத் தூண்டலாமா, மதக் கலவரத்தை ஏற்படுத்தலாமா, மக்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தலாமா என்று திட்டமிட்டு அந்த காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேவையற்ற விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வது இல்லை. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளது. சிறப்பான கூட்டணி அமைத்து, அனைத்து தேர்தல்களிலும் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து பெற்றுக் கொண்டு வருகிறோம். இதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நாட்டைக் காப்பற்ற வேண்டும் என்றால், மதச்சார்பற்ற தலைவர்கள் ஒன்று சேர்ந்து தேர்தல் களத்தில் நிற்க வேண்டும் என்று கூறி வருகிறேன். அதை நீங்கள் செய்தால், தமிழக மக்களை மட்டுமல்லாமல், இந்தியாவையும் காப்பாற்ற முடியும். உங்களிள் ஒத்துழைப்புடன் பணியை தொடர போகிறேன். நீங்கள் உங்களின் கடமையை ஆற்றுங்கள்" இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x