Published : 07 Mar 2023 04:33 AM
Last Updated : 07 Mar 2023 04:33 AM

சிவகங்கை அருகே 200 ஆண்டுகளாக நடக்கும் மஞ்சுவிரட்டு - ஆயிரம் காளைகளால் அதிர்ந்த அரளிப்பாறை

சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் சிறிய குன்றின் மீது அமைந்த பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டை கண்டு களித்த பார்வையாளர்கள்.

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே நேற்று நடந்த அரளிப்பாறை மஞ்சு விரட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 60 பேர் காயமடைந்தனர்.

சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் சிறிய குன்றின் மீது குன்றக்குடி ஆதீன மடத்துக்குட்பட்ட பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. 5 நிலை நாட்டார்களுக்கு உட்பட்ட இந்த கோயிலில், ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவின் 10-ம் நாளில் மஞ்சுவிரட்டு நடக்கிறது.

இதனை முல்லைமங்கலம், சதுர்வேத மங்கலம், கண்ண மங்கலம், சீர்சேர்ந்த மங்கலம், வேழ மங்கலம் ஆகிய 5 நிலை நாட்டார்கள் சேர்ந்து 200 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தி காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மற்ற காளைகளுக்கும் வேட்டி, துண்டுகள் வழங்கப்பட்டன.

தொழுவில் இருந்து, பதிவு செய்யப்பட்ட 200 காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன.

50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். முன்னதாக ஆங்காங்கே வயல்வெளிகளில் கட்டுமாடுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. இதில் மாடு முட்டியதில் பார்வையாளர் மதுரை மாவட்டம் அரையினிப்பட்டியைச் சேர்ந்த முதியவர் மூக்கையா(60) என்பவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

மேலும் 60 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 7 பேர் சிவகங்கை, மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிசிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மஞ்சுவிரட்டு நடைபெற்ற இடத்தில் நபிஷாபானு தலைமையில் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

மலைக்குன்றின் மீது அமர்ந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள், சிறுவர்கள் மஞ்சுவிரட்டை ரசித்தனர். தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். டிஎஸ்பி ஆத்மநாதன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x