Published : 07 Mar 2023 06:08 AM
Last Updated : 07 Mar 2023 06:08 AM
புதுச்சேரி: புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ளவிளையாட்டு சாதனங்கள், சிறுகுளங்கள் ஆகியவை சீரமைக்கப்படாமல் இருப்பதால் குழந்தைகள் விளையாட முடியாமல் தவிக்கின்றனர். இப்பூங்கா மற்றும் கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி சாதனங்களும் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
புதுச்சேரி கடற்கரையையொட்டி பாரதி பூங்கா அமைந்துள்ளது. நகரின் முக்கியமான பொழுது போக்கு இடமாக பாரதி பூங்கா இருக்கிறது. இப்பூங்காவின் நடுவில் புதுவை அரசின் சின்னமான ஆயி மண்டபம் அமைந்துள்ளது. பாரதி பூங்காவின் எதிரே சட்டப்பேரவையும், மற்றொரு புறம் ஆளுநர் இல்லமான ராஜ்நிவாஸும் உள்ளது.
புதுவை பாரதி பூங்காவில் குழந்தைகள் விளையாட ஏராளமான சாதனங்கள் உள்ளன. குறிப்பாக ஊஞ்சல், சறுக்கு, சிறு குளங்கள், தொங்கு பாலம், மரங்கள் என பல விளையாட்டு சாதனங்கள் உள்ளன. குழந்தைகள் அதில் ஆர்வமுடன் விளையாடுவார்கள். தற்போது இந்த விளையாட்டு சாதனங்கள் பலவும் உடைந்து கிடக்கின்றன.
இதனால் குழந்தைகள் விளையாட முடியாமல் தவிக்கின்றனர். இங்குள்ள சிறு குளங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரி பாரதி பூங்கா முன்புபார்க்க அழகாக இருக்கும்.குழந்தைகளை அழைத்து வந்தால் அவர்கள் ஆர்வமாய் விளையாடுவார்கள். தற்போது விளையாட்டு சாதனங்கள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன.
குழந்தைகள் இந்த சாதனங்களில் விளையாடி காயமடைகின்றனர். குழந்தைகள் விளையாடும் வகையில் சாதனங்களை சீரமைக்க வேண்டும். இதுதொடர்பாக பலமுறை புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை." என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
உடற்பயிற்சி ஆர்வலர்கள் கூறுகையில், "பாரதி பூங்கா, கடற்கரைச் சாலையில் உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டன. உடற்பயிற்சி செய்ய விரும்புவோருக்கு அது பெரும் உதவியாக இருந்தது. பெண்களும் இதை பயன்படுத்தி வந்தனர். தற்போது அவற்றில் பல உடைந்து பயனற்றுகிடக்கின்றன. சிறிய அளவில் பழுதுஏற்பட்ட போதே அதை சீரமைக்கவில்லை. தலைமைச்செயலகம் எதிரே இருககும் முக்கிய ஒரு பூங்காவே இந்த நிலையில் இருப்பது பரிதாபரமானது" என்று கோபத்துடன் தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரியில் பாரதி பூங்கா மட்டுமில்லாமல் வெங்கட்டா நகர் பூங்கா உட்பட பல பூங்காக்களிலும் குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் மோசமாகதான் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
முதற்கட்டமாக பாரதி பூங்காவில் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, அதன் அழகை மேம்படுத்த வேண்டும். கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்வதால், அவசர அவசியம் கருதி உடனே சரிசெய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT