Published : 10 Sep 2017 12:05 PM
Last Updated : 10 Sep 2017 12:05 PM
சென்னை மாநகராட்சியின் மணலி மண்டலத்தில், வீடுகளில் உருவாகும் குப்பைகள் 100 சதவீதம் வகை பிரித்து வழங்கப்படுவதால், மாநகராட்சியின் செலவினமும் கொடுங்கையூருக்கு வரும் குப்பையும் குறைந்துள்ளன.
நாடு முழுவதும் குப்பைகளை கையாள்வது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. அது தொடர்பான வழக்குகளும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அதிகரித்துள்ளன. இதற்கு தீர்வு காண, மத்திய அரசு கடந்த 2014-ல் தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கி, குப்பை மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் குப்பை வகை பிரித்து பெறப்படுவதால், மாநகராட்சியின் செலவினம் மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு செல்லும் குப்பையின் அளவு குறைந்துள்ளன.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சியின் மணலி மண்டல செயற்பொறியாளர் எஸ்.தேவேந்திரன் கூறியதாவது:
மணலி மண்டலத்தில் 23,440 குடியிருப்புகள் உள்ளன. மக்கள்தொகை 1 லட்சத்து 40 ஆயிரம். தினமும் 55 டன் குப்பைகள் உருவாகின்றன. கடந்த பிப். 2016-ல் குப்பையை வகை பிரித்து பெறத் தொடங்கினோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு குறைவாக இருந்ததால், அப்பகுதியில் உள்ள 42 பள்ளிகளில்விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அதனால் தற்போது அம்மண்டலத்தில் உள்ள 7 வார்டுகளிலும், 100 சதவீதம் குப்பைகளை வகை பிரித்துப் பெறுகிறோம். 24 மணி நேரமும் குப்பைகளைப் பெறும் மையத்தையும் திறந்துள்ளோம். உலர் குப்பைகளை வாரம் ஒருமுறை பெறு கிறோம்.
மக்காத குப்பைகளை வகை பிரித்து, மறு சுழற்சிக்காக விற்பனை செய்து வருகிறோம். அதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது. இதனால் கொடுங்கையூர் குப்பைக் கிடங்குக்கு செல்லும் குப்பை, 55 டன்னில் இருந்து 19 டன்னாக குறைந்துள்ளது. காலணிகள், பைகள் போன்றவற்றை மறு சுழற்சி செய்ய விரும்புவோரை தேடி வருகிறோம். அவர்கள் கிடைத்துவிட்டால், தினமும் 5 சதவீதம் கொடுங்கையூர் கிடங்குக்குச் செல்லும்.
குப்பைகள் குறைந்ததால், குப்பைத் தொட்டிகளின் எண்ணிக்கை 238-ல் இருந்து 67 ஆக குறைந்துவிட்டது. அவற்றைக் கழுவும் செலவும், சில ஆண்டுகளுக்கு பிறகு, உடைந்த தொட்டிகளை மாற்றும் செலவும் குறைந்துள்ளது. எங்களிடம் இருந்த குப்பை ஏற்றிச் செல்லும் காம்பாக்டர் வாகனங்களின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2 ஆகக் குறைந்துள்ளது. அதன் மூலம், அந்த வாகனங்களைப் பராமரிக்கவும், எரிபொருள் நிரப்பவும், மாதத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் செலவிடுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது.
மக்கும் ஈரக்குப்பைகளில் இருந்து சமையல் காஸ் தயாரித்து, ஒரு அம்மா உணவகத்துக்கு பயன்படுத்துகிறோம். இந்த வசதி, உணவகத்தின் மாத காஸ் தேவையில் 66 சதவீதத்தைப் பூர்த்திசெய்கிறது.மேலும் குப்பைகளை இயற்கை உரமாக்கி விற்று வருகிறோம். இதன் மூலம் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கிறது. இதன் மூலம் குப்பை மேலாண்மையில் சென்னை மாநகராட்சிக்கே முன் மாதிரி மண்டலமாக மணலி விளங்குகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT