Published : 07 Mar 2023 03:39 AM
Last Updated : 07 Mar 2023 03:39 AM
மதுரை: மதுரை லேடி டோக் கல்லூரி மாணவி ஜெர்லின் அனிகா மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் விளையாடி தங்கம் உள்ளிட்ட 3 பதக்கம் வென்றார். இவருக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தது. ஜெர்லின் அனிகா மற்றும் உலக அளவில் விளையாடுப் போட்டியில் சாதித்த இக்கல்லூரி மாணவிகளுக்கான பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: "அனைவரும் பொறாமைப்படும் அளவிற்கு எனக்கு வரவேற்பு கொடுத்துள்ளீர்கள். எனக்கான வரவேற்பாக இதை பார்க்கவில்லை. விளையாட்டுப் போட்டியில் சாதனை புரிந்த வீராங்கனைகளுக்கென அளித்த வரவேற்பாகவே பார்க்கிறேன். விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து, எங்கு விளையாட்டு போட்டி நடந்தாலும், சிறப்பு விருந்தினராக பங்கேற்று வீரர்களை உற்சாகப்படுத்துகிறேன்.
ஜெர்லின் அனிகா பொருளாதாரம் படிக்கிறார். அவர் விளையாட்டிலும் சாதித்துள்ளார். வீரர் , வீராங்கனைகளை தயார் செய்வதற்கு பயிற்சியாளர்களும் முக்கியம். எங்களது ஆசிரியர்கள் அண்ணா, பெரியார், கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின். நிதி அமைச்சர் பேசும்போது, நாங்கள் வரும்போது ஒரு பேராசிரியர் வருவதைப் போல பாவித்து உற்சாகமின்றி இருப்பதாக கூறினார். ஆம், அவர் பேராசிரியர் தான். டிவி நிகழ்ச்சிகளில் எதிரில் பேசுபவருக்கு கூட, பாடம் எடுக்கக்கூடிய அளவுக்கு பேராசிரியராக உள்ளார். மேலும், சட்டமன்றத்தில் அவர் எழுந்து பேசத் தொடங்கினால் சட்டமன்றமே அமைதியாகும். அந்த அளவுக்கு எல்லோருக்கும் அவர் வகுப்பு எடுப்பார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் சாதித்த வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு கடந்த ஓராண்டில் தமிழ்நாடு முதல்வர் சார்பில், ரூ. 79.5 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையை ஊக்கப்படுத்தும் நோக்கில், தற்போது முதல்வர் கோப்பைக்கான போட்டிகளும் நடக்கின்றன.
ஜூனில் சென்னையில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடக்கிறது. 8 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கிரிக்கெட், கால்பந்து போட்டியை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க விரும்புகிறோம். அதுவே, நம் குடும்பத்தில் இருந்து ஒருவர் விளையாட சென்றால் பெற்றோர் பயப்படுகிறோம். விளையாட்டில் ஈடுபட்டால் வேலைவாய்ப்பு பொருளாதார சிக்கல் வருமோ என தயங்க வேண்டாம். வீரர்கள் வெளியில் வரவேண்டும். இந்த அரசு கல்வி, விளையாட்டு, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது." இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து வீராங்கனைகள் ஜெர்லின் அனிகா, ரோஸி மீனா, ரேவதி வீரமணியை பாராட்டி நினைவு பரிசை அமைச்சர் வழங்கினார். மேலும், ஜெர்லின் அனிகாவிற்கு கல்லூரி சார்பில், வழங்கிய ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். ஜெர்லின் பயிற்சியாளர் சரவணனுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி. மூர்த்தி, அன்பில் மகேஷ், ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், எம்எல்ஏக்கள் கோ. தளபதி, தமிழரசி, கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானாசிங் மற்றும் பேராசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT