Published : 06 Mar 2023 07:38 PM
Last Updated : 06 Mar 2023 07:38 PM
கும்பகோணம்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சித் நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கும்பகோணத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”கும்பகோணத்தில் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியன்றும், தேரோட்டத்தன்றும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். இங்குள்ள ஆயிகுளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் மற்றும் நீர் நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளதைச் சீர் செய்து பாதுகாக்க வேண்டும். மேலும், கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டம் விரைவில் அறிவிக்க வேண்டும். இங்குள்ள வெளி மாநில தொழிலாளர்களும், உள்ளூர் தொழிலாளர்களும் பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி போன்ற ஒரு சிலர் வெளி மாநிலத் தொழிலாளர்கள் மீது வன்மத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். திமுக அமைச்சர்கள்... ஏன் தமிழக முதல்வரும் கூட இந்தி மொழிக்கு எதிராகவும், இந்தி மொழி பேசும் மக்களுக்கு எதிராகவும், வெளி மாநிலங்களுக்கு எதிராகவும் பேசியிருக்கின்றார்.
வெளிமாநிலத் தொழிலாளர் மீது வெறுப்புணர்வை விதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவோம் என அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை கொடுத்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை கைது செய்வோம் எனத் தமிழக முதல்வரும், அமைச்சர்ளும் பேசுவது கண்டனத்துக்குரியதாகும்.
இதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த வேல்முருகனும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமானும் வெளிப்படையாகவே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். இதுபோன்ற பிரிவினைவாதத்தைத் தூண்டுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கைது நடவடிக்கையை மேற்கொள்வது கண்டனத்துக்குரியதாகும். அண்ணாமலை கைது செய்யப்பட்டால் ஜனநாயகத்திற்கு விழுந்த மிகப் பெரிய அடியாக இருக்கும், அதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, தமிழக அரசு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பதிந்துள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...